உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டி:இங்கிலாந்து வெற்றி

12 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின், இறுதிப்போட்டியில், மிகுந்த பரபரப்பிற்கு மத்தியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி தனது முதலாவது உலக கிண்ணத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

12 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டி, கடந்த மே மாதம் 30ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வந்தது.

இந்நிலையில், நடப்புச்சம்பியானான அவுஸ்ரேலிய அணியையும், பலம் மிக்க இந்திய அணியையும் அரையிறுதிப்போட்டியில் வீழ்த்தி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு நுழைந்திருந்தன.

இதனடிப்படையில் நேற்று, இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் 12 ஆவது உலக கிண்ண தொடரின் இறுதிப்போட்டி இடம்பெற்றது.

இப்போட்டியில், நாணயற்சுழற்சியில் வெற்றியீட்டிய நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்திருந்தது.

இதனடிப்டையில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, இங்கிலாந்து பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸின் அதிவேகமான பந்து வீச்சு மற்றும், ஏனைய வீரர்களின் வேகங்களுக்கும் முகங்கொடுக்க முடியாது தடுமாறியது.

இந்நிலையில், நியூசிலாந்து அணி 50 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 8 இலக்குகளை இழந்து 241 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

தொடர்ந்து 242 என்ற எளிதான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களம் நுழைந்த இங்கிலாந்து அணியை நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் தமது சாமர்த்தியமான வேகப்பந்து வீச்சுக்கள் மூலம் அச்சுறுத்தினர்.

இதன் காரணமாக 24வது பந்து பரிமாற்றத்தின் போது 4 இலக்குகளை இழந்து 86 ஓட்டங்களுடன் இங்கிலாந்து அணி தடுமாறியது.

தொடர்ந்து இணைப்பாட்டத்தை பகிர்ந்து கொண்ட, ஜோஸ் பட்லர் மற்றும் பென் ஸ்டாக் ஜோடி, நிதானமாக ஓட்டக்குவிப்பில் ஈடுபட்டு, அணியை வெற்றியிலக்கினை நோக்கி நகர்த்தினர்.
இங்கிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கை 196 ஆக உயர்வடைந்திருந்த நிலையில், ஜோஸ் பட்லர் 59 ஓட்டங்களை பெற்று, பிடிகொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

தொடர்ந்து களம் நுழைந்திருந்த கிறிஸ் வோக்ஸ் 2 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேற, வெற்றி வாய்ப்பு நியூசிலாந்து அணியிடம் சரிந்ததது.

இந்நிலையிலும், சிறப்பாக துடுப்பெடுத்தாடிய பென் ஸ்டோக் அணியினை உலக கிண்ணத்தை வசப்படுத்தும் வகையில் நேர்த்தியாக துடுப்பெடுத்தாடி நம்பிக்கையளித்தார்.

போட்டியின் இறுதிப் பந்து பரிமாற்றத்தில் வெற்றி பெறுவதற்கு 15 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், நியூசிலாந்து அணியின் டிரென்ட் பவுல்ட் பந்து வீச அழைக்கப்பட்டிருந்தார்.

முதல் இரு பந்துகளும் ஓட்டமின்றிய பந்துகளாக மாறிய நிலையில், 3 ஆவது பந்தினை பென் ஸ்டோக் 6 ஓட்டமாக மாற்றினார்.

தொடர்ந்து 4 ஆவது பந்தில், பென் ஸ்டோக் பந்தினை அடித்து விட்டு 2 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், எதிர்பாராத நிலையில் 4 ஓட்டம் ஒன்று உதிரி ஓட்டமாக இங்கிலாந்து அணிக்கு கிடைக்கப்பெற்றது.

இதனடிப்படையில் மிகுதியாக உள்ள 2 பந்துகளில் 3 ஓட்டங்கள் இங்கிலாந்து அணிக்கு வெற்றிபெற்றுக்கொள்ள தேவையாக இருந்தது.

இந்நிலையில் 5 ஆவது பந்தில் இரண்டு ஓட்டங்கள் ஓட முற்பட்ட போது பென் ஸ்டோக்குடன் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த மற்றொரு வீரரான அடில் ரஸித் ரன் அவுட் முறை மூலமாக வெளியேற்றப்பட்டார்.

மிகுந்த பரபரப்பு மிக்கதாக போட்டி மாறிய நிலையில், இறுதிப்பந்தில் 2 ஓட்டங்கள் இங்கிலாந்த அணிக்கு தேவைப்பட்ட நிலையில், அந்த பந்திலும் 2 ஓட்டங்கள் எடுக்க முற்பட்ட வேளை
ரன் அவுட் முறையில் இங்கிலாந்து அனி வீரர் மார்க்வுட் வெளியேற்றப்பட்டார், இதனால் போட்டி சமனிலையில் முடிவடைந்தது.

இதனையடுத்து, சுப்பர் ஓவர் முறையில் வெற்றியாளரை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது.
சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 15 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

16 என்ற இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடி நியூசிலாந்து அணியும் 15 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்ட நிலையில் சுப்பர் ஓவர் முறையில் போட்டி மீண்டும் சமனிலையடைந்தது.

இதனால் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளின் கீழ், சுப்பர் ஓவரிலும் போட்டி சமனிலையில் முடிவடைந்தால், அப்போட்டியில் அதிக 4 ஓட்டங்களை பெற்ற அணிக்கே வெற்றிவாய்ப்பு வழங்கப்படும்.

இதனடிப்படையில் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை விட 6 நான்கு ஓட்டங்களை அதிகமாக பெற்றுக்கொண்ட இங்கிலாந்து அணி
வெற்றிபெற்றதாக அறிக்கப்பட்டது.

இதன்படி 44 வருட பாரம்பரியத்தைக்கொண்ட உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில், கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்து அணி முதன் முறையாக கிண்ணத்தை கைப்பற்றி சாதனை புரிந்துள்ளது.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!