கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் இணைத்ததாக, புதிய அரசியல் கட்சியொன்று இன்று மட்டக்களப்பில் உதயமாகியுள்ளது.
கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில்; ‘ஒன்றிணைந்த தமிழ் மக்கள் கட்சி’ என்ற பெயருடன் இந்த கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அங்குரார்ப்பண கூட்டம் இன்று காலை மட்டக்களப்பு கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றது.
கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைவரும் சிரேஸ்ட சட்டதரணியுமான கே.சிவநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த கட்சி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இதன் போது ஒன்றிணைந்த தமிழ் மக்கள் கட்சி என்ற பெயர் சூட்டப்பட்டு கட்சி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதுடன், கட்சியை வழிநடத்தும் வகையில் மாவட்டங்களுக்கான தற்காலிக அமைப்பாளர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து கட்சியின் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது.
இந்த கூட்டத்தில் கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை ஒன்றிணைத்து செல்லக்கூடிய ஒரு தேவையிருப்பதன் காரணமாக இந்த புதிய கட்சியை அங்குரார்ப்பணம் செய்துள்ளதாக, கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைவரும் சிரேஸ்ட சட்டதரணியுமான கே.சிவநாதன் தெரிவித்தார்.
இதன் போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒன்றிணைந்த தமிழ் மக்கள் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் டாக்டர் கே.முருகானந்தனும் கருத்து தெரிவித்தார். (சி)