யாழ். ‘வடமராட்சி களப்பு’ செயற்திட்டம் தொடர்பில் ஆராய்வு

யாழ்ப்பாண மாவட்ட மக்கள் எதிர்நோக்கும், குடி நீர் பிரச்சினையை தீர்க்கும் முகமாக முன்மொழியப்பட்டுள்ள, வடமராட்சி களப்பு செயற்திட்ட அலுவலகத்திற்கு, அமைச்சர் மனோ கணேசன் மற்றும் ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோர், இன்று விஜயம் செய்தனர்.

இதன் போது, செயற்திட்டம் குறித்தும் செயற்திட்டத்தின் தற்போதைய நிலைமை குறித்தும் ஆராய்ந்துள்ளனர்.

பொறியியலாளர் குகனேஸ்வரராஜாவினால் முன்மொழியப்பட்டு, பொறியியலாளர் ஏ.டி.எஸ்.குணவர்த்தனவினால் தயாரிக்கப்பட்டு, அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டு, இதுவரை ஆரம்பிக்கப்படாமல் இருக்கும், ‘வடமராட்சி களப்பு’ நன்னீர் திட்டத்தினை ஆரம்பிப்பதற்கு நிதியுதவி வழங்க வேண்டும் என, ஆளுநர் அமைச்சர் மனோ கணேசனிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அமைச்சர், தனது தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய விவகார அமைச்சினூடாக, இந்த திட்டத்தினை ஆரம்பிப்பதற்கான நிதியுதவியினை வழங்க முன்வந்துள்ளார்.

இந்த செயற்திட்டம் தொடர்பாக அமைச்சருக்கு தெளிவுபடுத்துவற்கும், செயற்திட்ட பகுதியை நேரடியாக கண்காணிக்கும் நோக்கிலும், அமைச்சர் மனோ கணேசன், தொண்டமனாறு பகுதியில் அமைந்துள்ள செயற்திட்ட அலுவலகத்திற்கு விஜயம் செய்ததுடன், அமைச்சருக்கு இந்த திட்டத்துடன் தொடர்புடைய பொறியியலாளர்கள் விரிவாக தெளிவுபடுத்தினர்.

இந்த திட்டத்தினை ஆரம்பிப்பதற்கு, தனது அமைச்சினூடாக நிதியை வழங்குவதுடன், தனது அமைச்சினூடாக இந்த திட்டத்திற்கான முழு நிதியினையும் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக, அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பில், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், வட மாகாண சபை அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம், வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஆளுநரின் செயலாளர், யாழ். மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!