திருகோணமலை- கிண்ணியாவில் இழுவை படகு கவிழ்ந்ததில், மாணவர்கள் உட்பட 10 பேர் உயிரிழப்பு

திருகோணமலை – கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில், இழுவை படகு கவிழ்ந்ததில், மாணவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காணாமல் போயுள்ளனர். கிண்ணியா நகர சபையையும், பிரதேச சபையையும் இணைக்கும் பாலமே, குறிஞ்சாக்கேணி பாலமாகும். இக் குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு உடைந்து கவிழ்ந்ததில், பலர் நீரில் மூழ்கினர். இச்சம்பவம், இன்று காலை இடம்பெற்றுள்ளது. பாடசாலை மாணவர்கள் உட்பட 20 பேர் பயணம் செய்த நிலையில், விபத்து சம்பவித்துள்ளது. சம்பவத்தில் காப்பற்றப்பட்டவர்கள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு, தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும், விபத்தில் காணாமல் போயுள்ளவர்களை தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை, திருகோணமலை – கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலப்பகுதியில் பயணித்தவர்கள் தொடர்பில், உறவினர்களை, தகவல் வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை படகுப்பாதை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு சிறுவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், படகுப்பாதையில் பயணித்தவர்கள் எண்ணிக்கை சரியாக கண்டறியப்படாத நிலையில், அதில் பயணித்தவர்கள் எவரையும் காணவில்லை என்றால், உறவினர்களை அறியத்தருமாறு, கடற்படையினர் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில், தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த விபத்துச் சம்பவத்திற்கு, கிண்ணியா நகர சபையும் பிரதேச சபையுமே காரணம் எனத் தெரிவித்து பிரதேச மக்கள், வீதிகளில் டயர்களை எரித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதுடன், பிரதேச செயலகத்தையும் முற்றுகையிட்டு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

குறிஞ்சாக்கேணி பால விவகாரத்தில் தீர்வில்லை எனக்கூறி, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் வீட்டின் மீது, பொது மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். படகு விபத்தின் பலி எண்ணிக்கை உயர்ந்ததை அடுத்து, கிண்ணியாவில் பதற்ற நிலைமை தோன்றியிருந்தது. அதனையடுத்து, அப்பகுதியில் உள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் வீட்டின் மீது, மக்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். குறித்த சம்பவத்தை கட்டுப்படுத்துவதற்காக, பொலிஸார், கடற்படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர், சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

அத்துடன், கிண்ணியா படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள், கிண்ணியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
கிண்ணியாவில் படகு விபத்தில் சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்தையடுத்து அப்பகுதி மக்களின் கோபத்தினால், அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில், சடலங்கள், கிண்ணியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!