சுபீட்சமான நாட்டிற்குப் பதிலாக கழிவுகள் தேங்கிய நாடுதான் எஞ்சியிருக்கின்றது! – சஜித்

‘சுபீட்சமான நாடாக’ கட்டியெழுப்புவதாகக் கூறி வந்த அரசாங்கம் தற்பொழுது குப்பை தேசமாக கட்டியெழுப்பிக் கொண்டிருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாட்டிற்கு தகுதியற்றது என்று உறுதி செய்யப்பட்ட உரக் கப்பலை திருப்பி அனுப்புவதாக அரசாங்கம் கூறினாலும், குப்பைகளுடன் நாட்டுக்குப் பொருத்தமற்ற உரக் கப்பல் இலங்கைக்கு மீண்டும் திரும்பி வந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். அரசாங்கம் தேர்தலின்போது வாக்குறுதியளித்த ‘சுபீட்சமான நாட்டிற்குப்’ பதிலாக கழிவுகள் தேங்கிய நாடுதான் இப்போது எஞ்சியிருக்கின்றது என்றும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘கொவிஹதகெஸ்ம’ நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் நேற்று திஸ்ஸமகாராம, ரன்மினிதென்ன என்ற பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகளைச் சந்தித்த சஜித் பிரேமதாஸ, அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து விவசாயிகளின் முன்நிலையில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘அரசாங்கத்தின் முறையற்ற தீர்மானங்கள் மற்றும் செயற்திறனற்ற நிர்வாகத்தினால் கொவிட் – 19 வைரஸ் பரவல் நெருக்கடியின் தீவிரத்திற்கு எமது நாடு முகங்கொடுத்தது. தடுப்பூசிகளை விரைவாகப் பெற்றுக்கொடுத்து தொற்றிலிருந்து மக்களைக் காப்பற்றக்கூடிய வாய்ப்பு காணப்பட்டபோதிலும், அரசாங்கம் அதனைச்செய்யாமல் மூடநம்பிக்கைகளின் பின்னால் சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில் கொவிட் – 19 வைரஸ் தொற்றுப்பரவலைத் தொடர்ந்து நாட்டிற்குப் பாரிய பேரழிவை ஏற்படுத்தும் வகையிலேயே அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் அமைந்துள்ளன. பால்மா, சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காகப் பொதுமக்கள் நீண்டவரிசைகளில் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. விவசாயிகள் பயிர்ச்செய்கைகளில் ஈடுபடுவதற்கு அவசியமான உரத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. பொருட்களின் விலைகள் சடுதியாகப் பெருமளவால் அதிகரித்திருக்கின்றன.

வருமானம் உயர்வடையாத போதிலும், வாழ்க்கைச்செலவு அதிகரித்துள்ள நிலையில் மக்கள் பசியால் வாடுகின்றார்கள். வெகுவிரைவில் எரிபொருள் விலைகளும் அதிகரிக்கப்படக்கூடிய நிலையிலுள்ளன. இவையனைத்திற்கும் அரசாங்கமே பொறுப்புக்கூறவேண்டும். தீங்கேற்படுத்தும் நுண்ணுயிரிகள் இருப்பது கண்டறியப்பட்டுத் திருப்பியனுப்பப்பட்ட உரம் ஏற்றப்பட்ட கப்பல் தற்போது மீண்டும் நாட்டைநோக்கி வந்துகொண்டிருக்கின்றது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரத்தில் அடையாளங்காணப்பட்ட தீங்கேற்படுத்தும் நுண்ணுயிரிகள் தொடர்பில் கேள்வியெழுப்பப்பட்டபோது, அக்கப்பலை திருப்பியனுப்பிவிட்டதாகக் கூறினார்கள். ஆனால் தற்போது என்ன நடக்கின்றது? அரசாங்கம் தேர்தலின்போது வாக்குறுதியளித்த ‘சுபீட்சமான நாட்டிற்குப்’ பதிலாக கழிவுகள் தேங்கிய நாடுதான் இப்போது எஞ்சியிருக்கின்றது.

எனவே நாட்டுமக்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு நிவாரணங்களை வழங்குவதற்கும் அவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் தகுதிவாய்ந்தவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு விலகிக்கொள்ளவேண்டும்.
பசுமை விவசாயத்திற்கென விசேட ஜனாதிபதி செயலணியொன்று நிறுவப்பட்டுள்ளது. சாதாரண விவசாயிகளின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்கு பிரத்யேக செயலணியை நிறுவவேண்டிய அவசியமில்லை. அவர்கள் உரத்தையும் கிருமிநாசினியையும் பெற்றுத்தருமாறுதான் கேட்கின்றார்கள். அதற்குத் தீர்வை வழங்குவதைவிடுத்து, அவர்களைப் பழிவாங்கும் வகையிலேயே அரசாங்கம் செயற்பட்டுவருகின்றது.’ எனத் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!