சுயமதிப்பீடொன்றை மேற்கொள்ளவேண்டிய நிலையில் நாடு! – ரவி குமுதேஷ்

நாட்டின் நிர்வாகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தீர்மானங்களை சுயபரிசீலனைக்கு உட்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாக ஜனாதிபதி புரிந்துகொண்டிருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும் என மருத்துவ ஆய்வுகூட சேவை தொழில்வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

‘அண்மைக்காலத்தில் அத்தியாவசியப்பொருட்கள் உள்ளடங்கலாக அனைத்துப் பொருட்களினதும் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதனை ஈடுசெய்வதற்கு ஏற்றவகையில் ஊதியமோ அல்லது வேறு வழிமுறைகளிலான வருமானமோ அதிகரிக்காமையின் விளைவாக நாட்டுமக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இவ்வாறானதொரு சூழ்நிலையில் நாட்டின் நிர்வாகம் குறித்து சுயபரிசீலனையொன்றை மேற்கொண்டு, சரியான பாதையில் நிர்வாகத்தை முன்னெடுத்துச்செல்லவேண்டிய அவசியம் காணப்படுவதாக ஜனாதிபதி கூறியிருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும்.
உண்மையிலேயே சுயமதிப்பீடொன்றை மேற்கொள்ளவேண்டிய தேவையில் நாடு தற்போது இருக்கின்றது. அனைத்துத் துறைகளின் நிர்வாகமும் முழுமையாகச் சீர்குலைந்திருப்பதை அவதானிக்கமுடிகின்றது.

குறிப்பாக கொவிட் – 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்கூட உரியவாறு நடைமுறைப்படுத்தப்படவில்லை.
நாட்டிலுள்ள சேவை வழங்கல் நிலையங்கள் உள்ளடங்கலாக அனைத்துக் கட்டமைப்புக்களிலும் கொவிட் – 19 கட்டுப்பாடு தொடர்பில் அதிகாரியொருவரை நியமிக்குமாறு தொற்றுநோய்த்தடுப்புப்பிரிவு அறிவுறுத்தியுள்ளது. அதாவது, நாட்டிற்கு வருமானத்தையும் சேவையையும் வழங்குகின்ற கட்டமைப்புக்களே கொவிட் – 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதாரத்தரப்பினரின் பணியையும் அவர்களே பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதே அதன் அர்த்தமாகும். அதுமாத்திரமன்றி அக்கட்டமைப்புக்களில் கொவிட் – 19 வைரஸ் பரவல் ஏற்படும்பட்சத்தில், அதற்குரிய பொறுப்பு குறித்த அதிகாரியின்மீது சுமத்தப்படும். நாடளாவிய ரீதியில் கொவிட் – 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான எந்தவொரு விஞ்ஞானபூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளின் எண்ணிக்கையைக் குறைத்து, வேறு உள்நோக்கங்களை அடிப்படையாகக்கொண்ட நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அடுத்ததாக ஜனாதிபதி ஏற்கனவே கூறியதுபோன்று நாட்டின் நிர்வாகம் தொடர்பில் சுயபரிசீலனையொன்றை மேற்கொள்ளவேண்டுமாயின், தற்போது அவரைச்சூழ்ந்துகொண்டிருக்கும் தரப்பினருடன் இணைந்து ஒருபோதும் அதனைச்செய்யமுடியாது. ஏனென்றால் அவர்கள் ‘நீங்கள்தான் அனைத்தையும் சிறப்பாகச் செய்தீர்கள், உங்களை வேறு எவராலும் விஞ்சமுடியாது, தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் நிர்வாகமுறையே சிறந்தது’ என்றுதான் ஜனாதிபதியிடம் கூறுவார்கள். ஆகவே உண்மையிலேயே நிர்வாகம் உள்ளிட்ட அனைத்தையும் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தவேண்டிய தேவையிருந்தால், முதலில் உங்களைச்சூழ அதற்குப் பொருத்தமான தரப்பினரை நியமியுங்கள். ஏனெனில் கொவிட் – 19 வைரஸ் பரவல் நெருக்கடியைக் கையாளும் விடயத்தில்கூட, உரியவாறான விஞ்ஞான அடிப்படைகள் தயாரிக்கப்படவில்லை என்பதுடன் அதனை மையப்படுத்திய அறிக்கைகளை சுகாதார அமைச்சினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுமில்லை. ஆகவே முதலில் பொருத்தமான தரப்பினரை நியமித்து, கடந்தகாலத்தில் இடம்பெற்ற தவறுகள் குறித்தும் எதிர்காலத்தில் பயணிக்கவேண்டிய பாதை குறித்தும் ஜனாதிபதி சுயபரிசீலனையொன்றைச் செய்வாராயின், அதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.’ எனக் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!