அமெரிக்காவில் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது விமானம் ஆட்டம் கண்டதால் 37 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது நடுவானில் விமானம் கடுமையாக ஆட்டம் கண்டதால் பதற்றம் ஏற்பட்டதுடன், 37 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
கனடாவின் வான்கூவர் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு ‘ஏர் கனடா’ நிறுவனத்துக்கு சொந்தமான ‘போயிங் 777-200’ ரக விமானம் ஒன்று 269 பயணிகள், 15 ஊழியர்களுடன் புறப்பட்டு சென்றது.
சுமார் 2 மணி நேரத்துக்கு பின்னர், அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கு மேலே, 36 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில் நடுவானில் விமானம் ஆட்டம் கண்டது.
விமானம் ஆட்டம் கண்டதால் பயணிகள் அச்சமடைந்தனர்.
பயணிகள் சிலர் ‘சீட் பெல்ட்’ அணியாமல் இருந்ததால் அவர்கள் முன் இருக்கைகள் மீதும், மேற்கூரையிலும் மோதி காயமடைந்தனர்.
இதனிடையே விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, சீராக இயக்க விமானி முயற்சித்தபோதும், விமானம் தொடர்ந்து, ஆட்டம் கண்டதால் விமானத்தை அவசரமாக தரையிறக்க விமானி முடிவு செய்தார்.
இதனையடுத்து ஹவாயின் ஹோனாலுலு நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு நிலைமையை எடுத்துக்கூறி விமானத்தை அவசரமாக அங்கு தரையிறக்க அனுமதி கோரப்பட்டது.
அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டு விமான ஊழியர்கள், பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
விமானம் நடுவானில் ஆட்டம் கண்டது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. (நி)