நியூயோர்க் சென்றடைந்தார் ஜனாதிபதி கோட்டபாய!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா புறப்பட்ட ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ
நியூயோர்க் நகரை சென்றடைந்துள்ளார். நியூயோர்க் விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரை ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் நிரந்தர பிரதிநிதி மோகன் பீரிஸ் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஐக்கிய அமெரிக்க இராஜ்ஜியத்தின் நியூயோர்க் நகரில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நேற்று அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், சர்வதேச மாநாடொன்றில் பங்கேற்பதற்காக நாட்டை விட்டுப் புறப்பட்டுச் செல்லும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்பதோடு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரில் அரச தலைவராக உரையாற்றவுள்ள முதல் சந்தர்ப்பமும் இதுவாகும். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில், இம்மாதம் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இம்முறை கூட்டத்தொடர், ‘கொவிட் 19 வைரஸ் தொற்றுப்பரவலில் இருந்து மீள்வதற்கான நம்பிக்கையின் மூலம் நெகிழ்ச்சியை வளர்த்தல், நிலைத்தன்மையை மீளக் கட்டியெழுப்புதல், பூமியின் தேவைகளுக்கு பதிலளித்தல், மனித உரிமைகளுக்கு
மதிப்பளித்தல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மறுமலர்ச்சி’ என்ற தொனிப்பொருளிலேயே இடம்பெறவுள்ளது. ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தொடரில், 22 ஆம் திகதியன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றவுள்ளார் என்பதுடன், கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள அரச தலைவர்களுடன், இரு தரப்புக் கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவுள்ளார். வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொழம்பகே ஆகியோரும், ஜனாதிபதியுடன் இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!