நாட்டில் இடம்பெற்ற தீவரவாத தாக்குதலை சஹ்ரானின் மனைவி நினைத்திருந்தால், தடுத்திருக்க முடியும் என நீதி மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் சமாதான நீதிவான்கள் பேரவையின் இலங்கைக்கான பணிப்பாளர் கலாநிதி பஹத் ஏ.மஜீத் தெரிவித்துள்ளார்.
கணவன் மற்றும் குழந்தைகள் என்ன செய்கின்றனர் என்பதை மனைவியாக, தாயாக, நாம் பொறுப்புணர்வுடன் அறிந்து நடக்க வேண்டும் என நீதி மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் சமாதான நீதிவான்கள் பேரவையின் இலங்கைக்கான பணிப்பாளர் கலாநிதி பஹத் ஏ.மஜீத் தெரிவித்தார்.
நிந்தவூர் இமாம் ரூமி வித்தியாலயத்தில் நேற்று மாலை இடம்பெற்ற மாதர்களுக்கான மனித உரிமை தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கில் அவர் இதனை தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட பணிப்பாளர் தேசகீர்த்தி எம்.ரி.கபூர் தலைமையில் கருத்தரங்கு இடம்பெற்றது.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பஹத் ஏ.மஜீத், இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த சில நாட்களாக மனித உரிமை மீறும் சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும், அந்த செயற்பாடுகளை தமது பேரவை கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களாகிய முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படும் செயற்பாடுகள் எதிர்காலத்திற்கு உகந்தவையாக இருக்காது.
அவை நல்லிணக்கத்திற்கு எதிரானதாகவே காணப்படும் என குறிப்பிட்ட அவர், இது குறித்து சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் போதைப்பொருளை பாரிய அளவில் கடத்தும் நபர்களுக்கு எதிராக அதிகபட்ச தண்டணையாக மரண தண்டனை வழங்க வேண்டும் எனவும் நீதி மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் சமாதான நீதிவான்கள் பேரவையின் இலங்கைக்கான பணிப்பாளர் கலாநிதி பஹத் ஏ.மஜீத் தெரிவித்தார். (நி)