உள்ளுராட்சி மன்றங்களிடம் றைமாஸ் மீடியா நிறுவனம் சரணடைந்து, உள்ளுராட்சி சபைகளின் எல்லைகளில் நாட்டப்படும் கேபிள் கம்பங்களுக்கு, வீதி ஆளுகை திணைக்களத்தின் அனுமதியுடன், உள்ளுராட்சி மன்றங்களின் அனுமதியும் பெற்றுக்கொள்ளப்படவேண்டும் என்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளது.
உள்ளூராட்சி மன்ற எல்லைகளிற்குள் நாட்டும் கம்பங்களிற்கு குறித்த வீதியின் ஆளுகை திணைக்களத்துடன் உள்ளுராட்சி மன்றங்களின் அனுமதியையும் பெற்றுக்கொள்ள றைமாஸ் நிறுவனம் மேன் முறையீட்டு நீதிமன்றில் இணக்கம் தெரிவித்துள்ளதன் அடிப்படையில் வழக்கு முடிவுறுத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைப் பகுதிக்குள் மாநகர சபையின் அனுமதி இன்றி றைமாஸ் நிறுவனம் கம்பங்களை நாட்டிய சமயம் மாநகர சபையால் பிடுங்கி எறியப்பட்டது.
அவ்வாறு அகற்றப்பட்ட சமயம் தமது சொத்திற்கு சேதம் ஏற்படுத்தியதாக யாழ்ப்பாணத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
அத்தோடு, உள்ளூராட்சி சபைகளின் எல்லைப் பகுதிகள் ஆனாலும், வீதி அபிவிருத்தி அதிகார சபைகளின் ஆளுகைக்குட்பட்ட வீதியோரம் வீதி அதிகார சபையின் அனுமதியுடன் மின் கம்பம் நாட்ட முடியும், அவற்றினை உள்ளூராட்சி மன்றங்கள் தடைபோட முடியாது என உத்தரவிடக்கோரி றைமாஸ் நிறுவனம் மேன் முறையீட்டு நீதிமன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஊடாக வழக்கொன்றை தாக்கல் செய்தது.
இதேநேரம் யாழ்ப்பாணம் மாநகர சபையின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகி உள்ளூராட்சி அதிகார சபைகளின் அனுமதி தேவை கிடையாது, வீதி அபிவிருத்தி அதிகார சபைகளின் அனுமதி போதுமானது என்பதனை ஏற்க முடியாது என்றும், வீதி அதிகார சபை தனது வீதியோரம் நாட்டுவதற்கான சிபார்சை அல்லது அனுமதியை மாத்திரமே வழங்க முடியும், ஆனால் இது உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரம் ஆகவே அங்கே அனுமதி பெற்றே கம்பங்களை நிறுவ முடியும் என தனது வாதத்தினை முன்வைத்தார்.
அத்தோடு, குறித்த ஓளிபரப்பு நிறுவனம் தற்போது அனுமதி பெற்றிருப்பினும் கம்பங்களை நாட்டும்போதும் குறித்த வழக்கை தாக்கல் செய்யும்போதும் ஒளிபரப்பு அனுமதியும் கிடையாது என்ற வாதத்தை முன் வைத்தார்.
இவற்றைக் கேட்டறிந்த நீதியரசர்களான யசந்த கொதாகொட மற்றும் அர்ச்சுனா ஒபயசேகர ஆகியோர் மேலதிக விளக்கங்களுடன் முறைப்பாட்டு சட்டத்தரணியை வினாவியபோது உள்ளூராட்சி மன்ற எல்லைகளிற்குள் நாட்டும் கம்பங்களிற்கு குறித்த வீதியின் ஆளுகை திணைக்களத்துடன் உள்ளுராட்சி மன்றங்களின் அனுமதியையும் பெற்றுக்கொள்ள நிறுவனம் சார்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இதே ஒத்த ஓர் வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றிலும் இடம்பெறும் நிலையில் குறித்த வழக்கையும் மீளப்பெற இணைக்கம் தெரிவித்த நிலையில் வழக்கு முடிவுறுத்தப்பட்டது. (நி)