தமிழ் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்காக அன்றி, தற்போது அரசாங்கத்தின் உறுதிக்காக செயற்பட்டு வருகின்றது என, குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தாராநாத் பஸ்நாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குற்றம் சுமத்தினார்.
‘நேற்றையதினம் ஜே.வி.பியினால் நம்பிக்கையில்லா யோசனை கொண்டுவரப்பட்டது.
ஐக்கிய தேசிய முன்னணி அதனை வென்று கொண்டதாகக் கூறினாலும், எம்மீது ஒரு குற்றச்சாட்டை ஜே.வி.பியினர் முன்வைக்கின்றனர்.
இது வெற்றி பெறும் சிறந்த தருணமாக இருந்தாலும், மஹிந்த ராஜபக்ச நழுவிவிட்டதாகவும், சம்பந்தனுடைய அனுசரணையுடன் இது தோற்கடிக்கப்பட்டதாகவும் அநுரகுமார கூறினார்.
2018 ஏப்ரல் 4 ஆம் திகதி, மத்திய வங்கி மோசடி தொடர்பில், நம்பிக்கையில்லா பிரேரணையை அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வந்த போது, சம்பந்தன் எதிர்கட்சித் தலைவராக இருந்தார். அப்போது அவர்மீது ஜே.வி.பி ஏன் குற்றஞ்சாட்டவில்லை.
அந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவாக அவர்கள் செயற்பட்டுவிட்டு, இப்போது மஹிந்த ராஜபக்ச மீது குற்றஞ்சாட்டுகின்றார்.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றி கொள்ள முடியாது என்பது, அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நன்கு தெரியும்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்து வெற்றி பெறச் செய்ய, கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களுடன் சேர்த்து பெரும்பான்மை இருந்த போது, அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நன்றாகவே தெரியும் இதனை வென்றுகொள்ள முடியாது என்பது.
இப்போது இந்தப் பிரேரணை ஊடாக அரசாங்கத்தை அவர் வலுப்படுத்திவிட்டார்.
வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்காக அன்றி, தற்போது அரசாங்கத்தின் உறுதிக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது’ என குறிப்பிட்டுள்ளார். (சி)