மன்னார் ஆயர் நாடு திரும்பியதும் பேச்சுவார்த்தை : மனோ

மன்னார் திருக்கேதீஸ்வரம் தொடர்பான பேச்சுவார்த்தை, வெளிநாடு சென்றுள்ள மன்னார் ஆயர் நாடு திரும்பும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், அவர் இன்று ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

அந்த அறிக்கையில், திருக்கேதீஸ்வரம் ஆலய வீதி வளைவு அமைப்பது தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காண்பதற்காக, சனிக்கிழமை 13 ஆம் திகதி, மன்னார் மாவட்ட செயலகத்தில், அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ளும் கலந்துரையாடல், அமைச்சர் மனோ கணேசனின் பணிப்புரையின் பேரில், மன்னார் மாவட்ட செயலாளரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கு இரு தரப்பு மத தலைவர்கள், ஆலய பிரதிநிதிகள், மாவட்ட எம்.பீக்கள், அரச அதிகாரிகள், பிரதேச சபை தலைவர் உட்பட அனைத்து தரப்பினரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக, மன்னார் ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ அவர்கள் வெளிநாடு சென்றுள்ள காரணத்தினால், நடைபெற இருந்த கலந்துரையாடலை, பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைக்கும்படி, வன்னி மாவட்ட எம்.பீக்கள் செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர், அமைச்சர் மனோ கணேசனிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

அதனடிப்படையில், பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மன்னார் ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ கலந்து கொள்ளாமல், இந்த பேச்சுவார்த்தை ஒருபோதும் பலனளிக்கப்போவதில்லை.

ஆகவே அவர் வரும் வரை பேச்சுவார்த்தையை ஒத்திவைக்கும்படி எம்.பீக்கள் விடுத்துள்ள கோரிக்கையில் நியாயம் இருப்பதாக நினைக்கின்றேன்.

இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற எண்ணப்பாடு, தமக்கும் இருப்பதாக அவர்கள் என்னிடம் தெரிவித்துள்ளார்கள்.

தமிழர்கள் மத அடிப்படையில், இந்து, கத்தோலிக்கர் என்ற அடிப்படையில் பிரிவதற்கு இடம் கொடாமல் நாம் செயற்பட வேண்டும் என அவர்களுக்கு நான் கூறினேன்.

அத்துடன், ஆயர் நாடு திரும்பிய உடன், கலந்துரையாடலை கூடிய விரைவில் நடத்த, புதிய திகதிகளை பெற்றுத்தரும்படி அவர்களிடம் நான் கூறியுள்ளேன்.

கட்டாயமாக, ஆயரிடம் பேசி புதிய திகதிகளை பெற்றுத்தருவதாக, வன்னி மாவட்ட எம்பீக்கள் செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் இருவரும் என்னிடம் உறுதியளித்துள்ளனர்.
என அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!