ராஜனுக்கு 1236 மில்லியன் வழங்கிய ரிஷாட் : அளுத்கமகே

யாழ்ப்பாணத்தை வதிவிடமாக கொண்ட ராஜன் என்பவருக்கு சதொச நிறுவனத்தின் 1236 மில்லியன் ரூபாவினை பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் வழங்கியிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

குறித்த பணத்தினை ராஜன் மீளச்செலுத்தாது நான்கரை வருடங்களாக ஏமாற்றிவருவதாகவும், இது தொடர்பில் ராஜனுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்காக நினைவூட்டல் கடிதம் அனுப்பியபோதும் மேலதிக நடவடிக்கையினை மேற்கொள்ள றிசாட் பதியுதீன் கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் இலஞ்ச ஊழல் மோசடி ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடாத்திய ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

ராஜன் என்று சொல்லப்படுகின்ற ஒருவர் யாழ்ப்பாணத்தினை வதிவிடமாகக் கொண்டவர். அவரின் பெயரில்தான் வியாபார நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

றிசாட் பதியுதீன் அவர்களின் நெருங்கியவர்தான் இந்த ராஜன். அவரின் பதிவில்த்தான் இந்த வியாபார நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

சதோச நிறுவனம் ஊடாக 1236 மில்லியன் ரூபாய் ராஜனுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. தவணைக் கட்டணம் ஊடாக அதனை செலுத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில் 236 மில்லியன் ரூபாய்களை கடந்த நான்கரை வருடங்களாக ராஜன் என்பவர் செலுத்தவில்லை. இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக டிமான்ட் லெட்டர் அனுப்பப்பட்டது.

அதில் அமைச்சர் றிசாட் தலையிட்டு அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முன்வரவில்லை. அவர் அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு இந்த ராஜன் சொந்தமா இல்லையா என்பது எனக்கு தெரியாது. அவ்வாறு இருக்க வாய்ப்பு உள்ளது. அவர்களது உறவுமுறை தொடர்பில் தெரியாத காரணத்தினால் என்னால் சொல்ல முடியாது. இது போன்று றிசாட் நிர்வகிக்கும் தொலைக்காட்சி அலைவரிசையும் அவரின் பெயரில் இல்லை. அது வேறு பெயரில் உள்ளது.

எனவே உறவுமுறை தொடர்பில் எனக்கு தெரியாது. ஆயினும் அமைச்சர் றிசாட் பதியுதீன் எந்தவித பிணையும் இன்றி இந்த ராஜன் என்பவருக்கு இந்த பெருந்தொகை பணத்தினை வழங்கியிருக்கின்றார்.

இதேவேளை, றிசாட் பதியுதீனுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டினையும் ஏப்பிரல் 21 குண்டுத்தாக்குதலுடன் இணைக்க வேண்டாம் எனவும், அது வேறு இது வேறு எனவும் குறிப்பிட்டுள்ள அவர், தற்போதய அரசாங்கம் செய்த ஊழல்களை வெளியே கொண்டுவரும் புதிய வேலைத்திட்டம் ஒன்றினை தாம் ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

றிசாட் பதியுதீனுக்கு எதிராக நாம் முறைப்பாட்டை பதிவு செய்தவுடன் சிலர் நினைக்கின்றார்கள். நாம் இனவாதிகள் அடிப்படைவாதிகள் என்று.

உண்மையில் அவ்வாறு இல்லை. எனவே உங்களுக்கு ஒன்றை கூறவேண்டும். ஏப்பிரல் 21 குண்டு வெடிப்பினையும் சதோச நிறுவனத்தில் இடம்பெற்ற பண மோசடியினையும் ஒன்றாக இணைத்துப் பேசவேண்டாம்.

அதுவேறு இது வேறு. இரண்டையும் ஒன்றாக பார்க்க வேண்டாம். இது எமது வேறு ஒரு வேலைத்திட்டம். இந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் செய்த ஊழல்களை வெளியே கொண்டு வருவது.

புத்தளத்திலிருந்து சொப்பின் பாக்குடன் வந்த றிசாட் பதியுதீன் இன்று பெரிய கோடீஸ்வராக இருக்கின்றார். அதுபோன்று அவரின் மனைவியின் பெயரில் கண்டு பிடிக்க முடியாத பெருந்தொகை பணம் பரிமாறப்பட்டுள்ளதாக பத்திரிக்கை செய்திகளில் பார்க்க முடிந்தது.

அது தொடர்பில் சி.ஐ.டி விசாரணை நடாத்துவதாகவும் n தரிவிக்கப்பட்டுள்ளது. அது போன்று றிசாட் மற்றும் அவரின் உறவினர்களுக்கு 3 ஆயிரம் ஏக்கர் காணி சொந்தமாக இருப்பதாக ஊடகங்கள் ஊடாக செய்திகள் வந்தன. மனைவியின் பெயரில் பெருமளவு பணம் உறவினர்கள் பெயரில் பல ஏக்கர் காணி இருக்குமானால் அவை எவ்வாறு அவர் சேகரித்தார் என்று தேடிப்பார்க்க வேண்டும்.

அவரின் அமைச்சின் கீழ் இருந்த 42 திணைக்களங்களில் ஒன்றில் மட்டும் இடம்பெற்ற மோசடியை நாம் இன்று கூறியிருக்கின்றோம். ஒரு திணைக்களத்தில் ஐந்து பில்லியன் எனின் 42 திணைக்களத்தில் எத்தனை குற்றச்சாட்டுக்கள் இருக்கும் என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். எனவே அது தொடர்பில் புதிதாக நாம் ஒன்றும் சொல்லத் தேவையில்லை. என குறிப்பிட்டார் (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!