ரணிலின் மீள்வருகை இலங்கை அரசியலை மாற்றப் போகின்றதா?

வேகமாகப் பரவும் கொரோனாவின் பீதியில் இலங்கை மூழ்கிக் கிடக்க, உள்நாட்டு அரசியலிலும் அதிரடியான சில நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அதில் முக்கியமானது தான் ரணில் விக்கிரமசிங்கவின் மீள்வருகை. எதிர்வரும் 22 ஆம் திகதி அவர் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக் கொள்வார் என்ற செய்தி, கொழும்பு அரசியலைப் பரபரப்பாக்கியிருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.

ரணிலின் மீள் வருகையை தமக்குச் சாதகமாக்கிக் கொள்வதற்கான வாய்ப்புக்களை அரச தரப்பு பயன்படுத்த முற்பட்டுள்ளது. மறுபுறம் பிரதான எதிர்க் கட்சியான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இதனால் பெரிதும் குழம்பிப் போயிருக்கின்றது. இந்தப் பின்னணியில் ரணில் விக்கிரமசிங்கவின் மீள் பாராளுமன்றப் பிரவேசம் அரசியலரங்கில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுவதைப் போல புதிய திருப்பம் ஒன்றை ஏற்படுத்துமா என்பதை இந்த வாரம் ஆராய்வோம்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நாட்டை நீண்ட காலம் ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வி அடைந்தமை தெரிந்த செய்தி தான். கட்சியில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் ஏற்பட்ட தலைமைத்துவப் போட்டியும், சஜித் தனியாகப் பிரிந்து சென்று தேர்தலைச் சந்தித்தமையும் தான் ஐ.தே.க.வின் இந்தப் படுதோல்விக்குக் காரணம்.

தேசியப்பட்டியல் எம்.பி.

ரணிலின் தலைமையில் ஐ.தே.க.  தொடர் தோல்வியைச் சந்தித்து வருவதால், புதிய தலைமை ஒன்று அவசியம் என்பதை உணர்ந்து கொண்ட பெரும்பாலான கட்சி உறுப்பினர்கள், சஜித்தின் தலைமையை விரும்பினார்கள். கட்சித் தலைமையை விட்டுக் கொடுக்க ரணில் தயாராக இருக்காததால், தனியாகச் செல்வதைவிட சஜித்துக்கு வேறு வழி இருக்கவில்லை. விளைவு – தேர்தல் முடிவில் சஜித் எதிர்க்கட்சித் தலைவரானார். ஐ.தே.க. ஒரு ஆசனத்தைக் கூட பெறவில்லை. ஆனால், விகிதாசாரத் தேர்தல் முறையின் அடிப்படையில் தேசியப்பட்டியல் மூலம் ஒரு ஆசனம் ஐ.தேக.வுக்கு கிடைத்தது.

அந்த ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு உரியவரைத் தெரிவு செய்வதற்கு ஐ.தே.க.வுக்கு 10 மாதங்கள் சென்றிருக்கின்றது. பத்துமாத காலமாகத் தொடர்ந்த விவாதங்களை அடுத்து, இந்தத் தெரிவு இடம் பெற்றிருக்கின்றது. பொதுத் தேர்தலில் பலமான அடியை வாங்கிய ரணில், அப்போதைய நிலையில் பாராளுமன்றம் வருவதை விரும்பவில்லை. தனியொருவராக பாராளுமன்றம் வரும்போது தான் அவமானப்படுத்தப்படலாம் என்ற தயக்கம் அவருக்கு இருந்தது. அதே வேளையில், ஐ.தே.க.விலிருந்து மற்றொருவர் பாராளுமன்றம் வருவதையும் அவர் தந்திரமாகத் தடுத்திருந்தார். தனக்கான நேரம் வரும்வரைக்கும் அவர் காத்திருந்தார்.

இப்போது கட்சியின் செயற் குழுவின் முடிவு என்ற பெயரில் அவர் பாராளுமன்றம் வருகின்றார். கட்சியின் செயற்குழு அவருடைய முழு அளவிலான செல்வாக்கிற்கு உட்பட்டது. கொரோனா தொற்று, பொருளாதாரப் பிரச்சினை என அரசாங்கம் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியைச் சந்தித்திருக்கும் ஒரு பின்னணியில், ‘ரணிலின் தேவை’ உணரப்பட்டிருப்பதாகக் கூறியே அவர் இப்போது பாராளுமன்றம் வரவுள்ளார். அதே வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சஜித் பிரேமதாச ஆக்க பூர்வமாகச் செயற்படாமையும், பாராளுமன்றம் வருவதற்கு ரணில் திட்டமிட்டமைக்கு ஒரு காரணியாகச் சொல்லப்படுகின்றது.

சஜித் அணியின் குழப்பம்

ரணில் மீண்டும் பாராளுமன்றம் வரும் போது தனியாக வருவதற்கு விரும்பவில்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் சொல்கின்றன. கட்சியின் தனி ஒருவராக வந்திருப்பதற்கு அவர் விரும்பவில்லை. அதனால், சஜித் அணியிலுள்ள சிலரையாவது தனது பக்கத்துக்கு இழுத்துக் கொள்வதற்கான பேரங்கள் இடம் பெறுவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் சொல்கின்றன. அதனைவிட, ஆளும் கட்சியிலுள்ள அதிருப்தியாளர்கள் சிலரை தமது பக்கத்துக்கு இழுத்துக் கொள்வதற்கான முயற்சிகளையும் ரணில் மேற்கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. இதன்மூலம் எதிர்க் கட்சித் தலைமைப் பதவியை அவர் இலக்கு வைப்பதாகச் சொல்லப்படுகின்றது.

ஆளும் கட்சி எம்.பி.கள் சிலரும் இது தொடர்பாக கடந்த வாரம் பாராளுமன்றத்திலேயே பிரஸ்தாபித்திருக்கின்றார்கள். இதனை வெறுமனே ஒரு அரசியல் நோக்கத்துடனான பேச்சு எனக் கடந்து சென்றுவிட முடியவில்லை. காரணம் இலங்கையைப் பொறுத்த வரையில், அரசியலில் எதுவும் நடக்கலாம். 2015 இல் இருக்கும் இடமே தெரியாதிருந்த மைத்திரிபால சிறிசேன, திடீரென பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டு ஜனாதிபதியாக்கப்பட்டார். அதனால், ரணிலின் தற்போதைய நகர்வுகளின் பின்னணி என்ன என்பதை உறுதியாகச் சொல்லக் கூடிய நிலை இல்லை!

அதே வேளையில் சஜித் அணியும் இந்த நகர்வுகளால் குழப்பமடைந்திருக்கின்றது. கடந்த வாரம் அவசரமாகக் கூடிய சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, சஜித் பிரேமதாசதான் எதிர்க்கட்சித் தலைவர் என நம்பிக்கைத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. இவ்வாறான தீர்மானம் ஒன்றை அவசரமாக நிறைவேற்ற வேண்டிய அவசரம் எதற்காக சஜித் அணிக்கு ஏற்பட்டது என்ற கேள்விக்குப் பதிலில்லை.

அதேவேளையில், ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 22 ஆம் திகதி பாராளுமன்றம் வருவார் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு முதல் நாள் அதாவது 21 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழு அவசரமாகக் கூடுகின்றது. தமது அணியிலிருந்து யாரும் ரணிலுடன் இணைந்து கொள்வதைத் தடுப்பதற்கான ஒரு முயற்சி தான் இது. ஆக, ரணிலின் மீள்வருகை சஜித் முகாமில் பதற்றத்தை ஏற்படுத்தி இருப்பது தெளிவாகத் தெரிகின்றது.

ரணில் செய்யப்போவது என்ன?

அரசியலில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பின்னர் ‘நரி’ என வர்ணிக்கப்படும் ரணில் விக்கிரமசிங்கவின் மீள்வருகை, இலங்கை அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தாலும், முக்கியமான அரசியல் மாற்றம் ஒன்று ஏற்படுமா என்ற முக்கியமான கேள்வி எழுகின்றது. ராஜபக்‌சக்கள் இன்று இலங்கை அரசியலில் அசைக்க முடியாத சக்திகளாக இருப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

யுத்த வெற்றிக்கு அவர்கள் தான் காரணம் என சிங்கள மக்கள் நம்புவது முதலாவது காரணம். ராஜபக்‌சக்களும் அதனை அடிக்கடி சிங்கள மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

இரண்டாவது, சிங்கள – பௌத்த தேசியவாதத்தை அவர்கள் தமது கொள்கையாகக் கொண்டிருக்கின்றார்கள்.

ரணில் விக்கிரமசிங்கவை 2009இற்குப் பின்னர் ராஜபக்‌சக்கள் தொடர்ச்சியாகத் தோற்கடிக்கக் கூடியதாக இருந்தமைக்கு இவைதான் காரணம்.

இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்ட ஒருவராகத் தான் சஜித் பிரேமதாச, தன்னுடைய போக்கை மாற்றிக் கொண்டார். தன்னையும் ஒரு சிங்கள – பௌத்த தேசியவாதியாக அவர் காட்டிக் கொள்ள முற்பட்டிருப்பதை அண்மைக் காலத்தில் காண முடிகின்றது. இதன் மூலம் உள்நாட்டில் தன்னுடைய செல்வாக்கை அதிகரித்துக் கொள்ளலாம் என்ற உபாயத்துடன் சஜித் செயற்பட்டாலும், அதில் அவரால் முழுஅளவில் வெற்றி பெற முடியவில்லை. ராஜபக்‌சக்களின் இடத்தை அவரால் எட்ட முடியவில்லை.

அதே வேளையில் சர்வதேச அரங்கிலும் பலவீனமான ஒருவராகவே சஜித் உள்ளார். ரணிலைப் பொறுத்த வரையில், தன்னை ஒரு சிங்கள – பௌத்த தேசியவாதியாக அவர் ஒரு போதும் வெளிப்படுத்தியதில்லை. மறுபுறத்தில் சர்வதேச அரங்கில் மிகவும் செல்வாக்கான ஒருவராக அவர் உள்ளார். இலங்கையில் மீண்டும் ஒரு ஆட்சி மாற்றத்தை சர்வதேசம் விரும்புகின்றது என்பது இரகசியமானதல்ல. அண்மையில் கனடாவின் ஒன்ராரியோ மாநிலத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அமெரிக்க காங்கிரஸில் கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணை, ஐரோப்பிய ஒன்றியம் நிறைவேற்றிய தீர்மானம் என்பன இதனைத்தான் பிரதிபலிக்கின்றன.

தமது தேவைகளுக்கு ஏற்றவாறு செயற்படக் கூடிய ஒரு தலைவர் நாட்டில் இல்லை என்பது மேற்கு நாடுகளுக்கு ஒரு குறைபாடாகவே இருக்கின்றது. சஜித்தின் போக்கும் அவரது தலைமைத்துவக் குறைபாடுகளும் மேற்கு நாடுகளின் தேவைக்கு ஏற்றதாக இல்லை. ஆனால், மேற்கு நாடுகளைப் பொறுத்தவரையில் ரணிலை அவர்கள் விரும்புவதற்கு சில காரணங்கள் உள்ளது. ஆனால், களத்தில் செல்வாக்கில்லாத ஒருவரால் எப்படி அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த முடியும்?

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!