எக்ஸ்-ப்ரஸ் பேர்ள் தொடர்பில் இன்று கலந்தாய்வு

எக்ஸ்-ப்ரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலால் உருவாகியுள்ள அச்சுறுத்தல் மற்றும் பாதிப்பு என்பவற்றிற்கு நட்ட ஈடு வழங்குவதற்கு மேலதிகமாக சட்டரீதியான செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் விடயத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இதேவேளை எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டமையினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 5000 ரூபா இடர்கால கொடுப்பனவு வழங்க எதிர்பார்த்துள்ளதாக கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் தெரிவித்துள்ளார்.

இதற்கான நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை குறித்த கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டதையடுத்து நாட்டின் கடற்பரப்பில் கலந்த இரசாயனங்கள் ஊடாக கடல்வாழ் உயிரினங்களுக்கு இடைக்கால மற்றும் நீண்டகால பாதிப்புகள் உள்ளமை தெரியவந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. நாட்டின் கடற்பரப்பில் கலந்த இரசாயனங்கள் அடங்கிய 42 கொள்கலன்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகார சபை அறிவித்துள்ளது. அவற்றை சேகரிப்பதற்கான செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.
இதேவேளை இந்த விடயம் தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், இதற்கான பொறுப்பை எவரும் இதுவரையில் ஏற்கவில்லை எனவும், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பதவி விலக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!