பாடசாலைகளை திறக்கும் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை : கல்வி அமைச்சர்

தற்போதைய கொரோனா தொற்று பரவலின் மத்தியில், பாடசாலைகளை திறக்கும் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், பாடசாலைகளை திறக்கும் விவகாரத்தில், மாணவர்களின் சுகாதார பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும், கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று, கொழும்பில், அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார்.

சுபீட்சமான இலக்கு கொள்கை திட்டத்திற்கு அமைவாக, முன்பள்ளி மற்றும் ஆரம்ப பாடசாலைகளை மேம்படுத்தும் செயற் திட்டங்கள், தற்போது நாடு தழுவிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொருளாதாரம் உள்ளிட்ட பல நெருக்கடியான சூழ்நிலைகளுக்கு மத்தியில், முன்பள்ளி ஆசிரியர்கள் சேவையில் ஈடுபடுகிறார்கள்.

இவர்கள் பெறும் சம்பளம் குறைவானதாக காணப்பட்டாலும், அவர்கள் ஆற்றும் சேவை அளப்பரியது.

முன்பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், இதுவரை காலமும், அவர்களுக்கு வழங்கப்பட்ட 250 ரூபா மேலதிக கொடுப்பனவை, 2 ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரிக்க சமர்பித்த யோசனைக்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

அதனால், 25 ஆயிரம் முன்பள்ளி ஆசிரியர்கள் நன்மை அடைவார்கள்.

குடும்ப வறுமை காரணமாக, பெற்றோர் தங்களின் பிள்ளைகளை, பிறரின் பாதுகாப்பில் ஒப்படைத்து விட்டு, வெளிநாடுகளில் தொழில் புரிகிறார்கள்.

பிறரது பொறுப்பில் உள்ள பெரும்பாலான பிள்ளைகள், ஏதாவதொரு வழிமுறையில், சிறுவர் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

இவ்வாறான சம்பவங்கள், தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணமுள்ளன.

சிறுவர் சித்திரவதை குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளை திருத்தியமைக்க, நீதி அமைச்சு, உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இதற்கு, கல்வி அமைச்சின் ஊடாக, பல ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளோம்.

முன்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்ளுக்கு, ஆரம்ப கற்றல் எழுத்துக்களை மாத்திரம் கற்றுக் கொடுக்கும் வரையறைக்குள் இருக்கக் கூடாது.

பிள்ளைகளின் எதிர்காலத்தை சீர்படுத்தும் அடித்தளத்தை, முன்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு காண்பிக்க வேண்டும்.

ஆகவே, மாணவர்களின் எதிர்காலம் சிறந்த முறையில் அமைய, முன்பள்ளி ஆசிரியர்களின் பங்களிப்பு பிரதானமானதாகும்.

கொரோனா தொற்று காரணமாக, கல்வித் துறைக்கு பாரிய சவால் ஏற்பட்டுள்ளது.

கடந்த வருடம், பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள், முழுமையாக இடம்பெறவில்லை.

மாணவர்கள், உளவியல் ரீதியில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ், கடந்த காலத்தை விடவும், தற்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில், பாடசாலைகளை மீள திறக்கும் தீர்மானம் ஏதும், இதுவரையில் எடுக்கப்படவில்லை.

பாடசாலைகளை திறக்கும் விவகாரத்தில், மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு உள்ளிட்ட காரணிகளுக்கு, முன்னுரிமை வழங்கப்படும்.

தொலைநோக்கு கல்வி முறைமை, தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலத்திரனியல் முறைமை ஊடாக, தற்போது மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தொலைநோக்கு கல்வி முறைமை, மாணவர்களுக்கு முழுமையான கற்பித்தலை வழங்கும் என குறிப்பிட முடியாது.

இருப்பினும், தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், இதனை தவிர்க்கவும் முடியாது.

தொலைநோக்கு கல்வி முறைமை ஊடாக, கற்றல் நடவடிக்கையை விரிவுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கு, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவருடன், பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான, கல்வி பொது தரா தர சாதரண தரம் மற்றும் உயர் தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பாடத் திட்டத்தை முழுமைப்படுத்த, தொலைக்காட்சி சேவை ஊடாக, கற்பித்தலை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!