அரசுக்கு விரைவில் பாடம் புகட்டத் தயார்! – ரணில் அதிரடி அறிவிப்பு

நாட்டு மக்கள் முட்டாள்கள் என்ற நினைப்புடன் தான்தோன்றித்தனமாகச் செயற்படும் அரசுக்கு விரைவில் பாடம் புகட்ட நான் தயாராகவுள்ளேன் என்று முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

நாட்டு மக்கள் இன்று கொரோனாவின் மூன்றாவது அலைக்குள் சிக்கித் தவிக்க அரசே முழுக்காரணம். கொரோனாவின் மூன்றாவது அலை உருவெடுத்தபோது ‘போர்ட் சிட்டி’ ஆணைக்குழு சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்காக நாட்டை ஒரு மாதத்துக்கு மேல் முடக்காமல் அரசு இருந்தது. இதனால் நாடெங்கும் கொரோனா பரவியது. தற்போது வீட்டுக்குள்ளும் கொரோனா சென்றுள்ளது. அதனால் வீடுகளுக்குள்ளேயே மரணங்கள் அதிகரிக்கின்றன.

ஆரம்பத்தில் விசேட வைத்திய நிபுணர்களின் அறிவுறுத்தல்களுக்கு இந்த அரசு செவிசாய்க்கவில்லை. இதன்காரணமாக நாடு இன்று பேராபத்தைச் சந்தித்துள்ளது. நாட்டு மக்கள் முட்டாள்கள் என்ற நினைப்புடன் தான்தோன்றித்தனமாகச் செயற்படும் அரசுக்கு விரைவில் பாடம் புகட்ட நான் தயாராகவுள்ளேன். அரசுக்கு எதிரான அனைத்துத் தரப்பினரையும் ஓரணியில் திரளுமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன் – என்றார்.

இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்துக்குப் பிரவேசிப்பதற்கான தகுந்த சுபநேரத்தை கணித்து வருகின்றார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது பெயரைக் குறிப்பிட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கடிதம் அனுப்புவதற்கு ஒரு சுபநேரமும், நாடாளுமன்றத்துக்குள் பிரவேசிப்பதற்குப் புறம்பான சுபநேரமும் அவர் கணித்து வருகின்றார் எனவும் தெரியவந்தது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!