நாசா அனுப்பும் விண்கலன் வெள்ளி கோளில் ஆய்வு

சூரிய குடும்பத்தில் மிக வெப்பமான கோளான வெள்ளிக்கு இரண்டு விண்கலன்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா.
இந்த இரண்டு விண்கலன்களும் புவிக்கு அருகில் உள்ள கோளான வெள்ளியின் வளி மண்டலத்தையும், மண்ணியல் கூறுகளையும் ஆராயும்.

இந்த விண்கலன் ஒவ்வொன்றையும் அனுப்புவதற்கு தலா 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் விண்கலன் 2028ம் ஆண்டும், இரண்டாவது கலன் 2030-ம் ஆண்டும் செலுத்தப்படும்.

கடந்த 30 ஆண்டு காலமாக அமெரிக்கா வெள்ளிக்கு விண்கலன் எதையும் அனுப்பியதில்லை. எனவே, இந்த இரண்டு விண்கலன்களும் வெள்ளி கோளை ஆராய வாய்ப்பளிக்கும் என்று நாசா அமைப்பின் தலைவர் பில் நெல்சன் கூறியுள்ளார்.

இதற்கு முன்பு வெள்ளிக்கு அமெரிக்கா அனுப்பிய கடைசி விண்கலன் மெகல்லன். இந்த சுற்றுவட்டக் கலன் 1990ல் செலுத்தப்பட்டது. அதற்குப் பிறகு ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை அனுப்பிய விண்கலன்கள் வெள்ளியை சுற்றிவந்துள்ளன. இந்த விண்கல திட்டம் தொடர்பான ஆய்வேடுகளை சக ஆய்வாளர்கள் ஆராய்ந்து ஏற்றதை அடுத்து, இந்த விண்கலன்களால் ஏற்பட சாத்தியமான அறிவியல் பலன்களையும், இந்த விண்கலன்களை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்த பிறகு இந்த திட்டங்கள் ஏற்கப்பட்டன.
ஈயத்தை வைத்தால் தானாக உருகும் அளவுக்கு வெள்ளி கோளின் தரை வெப்பநிலை உள்ளது. இப்படி நரகத் தீயாக வெள்ளி ஏன் தகித்துக்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதே இந்த இரண்டு விண்கலப் பயணங்களின் நோக்கம்” என்று தெரிவித்துள்ளார் நெல்சன்.

சூரியனிடம் இருந்து வரிசையில் இரண்டாவதாக உள்ள வெள்ளிதான் சூரிய குடும்பத்திலேயே மிக வெப்பமான கோள். இதன் தரை வெப்பநிலை சுமார் 500 டிகிரி செல்ஷியஸ். இது ஈயத்தை உருக்கப் போதுமானது.

முதல் விண்கலனான டாவின்சி+ விண்கலன் வெள்ளி கோளின் வளி மண்டலத்தை ஆராயும். இந்த கோள் எப்படி உருவானது, வளர்ந்தது என்பது குறித்து அறிந்துகொள்ள புலம் தேடுவதே இந்தப் பயணத்தின் நோக்கம். கடந்த காலத்தில் எப்போதாவது வெள்ளியில் கடல் இருந்ததா என்று ஆராய்வதும் இந்தப் பயணத்தின் நோக்கமாக இருக்கும்.
வெள்ளியின் கல் பாவியது போன்ற மண்ணியல் கூறுகளை காட்டும் உயர் தெளிவான படங்களை முதல் முறையாக டாவின்சி+ எடுத்து அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மண்ணியல் கூறு புவியின் கண்ட அமைப்புடன் ஒப்புநோக்கும் வகையில் இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் நினைக்கின்றனர். இந்த ஒப்பீடு வெள்ளியில் கண்டத் திட்டு இருப்பதை உறுதி செய்யலாம் என்றும் அவர்கள் நினைக்கின்றனர்.

இரண்டாவது விண்கலன் பெயர் வெரிட்டாஸ் இந்த விண்கலன் வெள்ளியின் புறப்பரப்பை படம் பிடித்து அதன் மண்ணியல் வரலாற்றையும், இது எப்படி புவியைப் போல அல்லாமல் மாறுபட்ட முறையில் உருவானது என்பதையும் ஆராயும்.

இந்த விண்கலன் ஒருவிதமான ரேடாரைப் பயன்படுத்தும். இதன் மூலம் எரிமலைகளும், நில நடுக்கங்களும் இன்னும் வெள்ளியில் நிகழ்கின்றனவா என்பதை பதிவு செய்யும்.
“வெள்ளியைப் பற்றி நாம் எவ்வளவு குறைவாக அறிந்துவைத்திருக்கிறோம் என்பது வியப்பூட்டக்கூடியது. இந்த இரண்டு விண்கலப் பயணங்களும் வெள்ளியின் விண்ணில் உலவும் மேகங்களில் இருந்து, அதன் தரைப்பரப்பில் உள்ள எரிமலைகள், அதன் உட்கரு வரை ஆராய்ந்து கூறும்” என்கிறார் நாசாவின் கோள் அறிவியல் பிரிவைச் சேர்ந்த டாம் வேக்னர்.

“அந்த தகவல்கள், நாம் மீண்டும் புதிதாக வெள்ளியைக் கண்டுபிடித்துள்ளோமா என்று ஆச்சரியப்படும் வகையில் இருக்கும்,” என்று அவர் கூறினார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!