முல்லைத்தீவில் 5ஜி அலைவரிசை தொடர்பில் விவாதம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 ஜி அலைவரிசை கோபுரம் தொடர்பாக ஆராய்வதற்கு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்திலும் 5 ஜி அலைவரிசை கோபுரங்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை அமர்வில் விவாதம் இடம்பெற்றுள்ளது,
இதனையடுத்து குறித்த விடயங்கள் தொடர்பாக தொழில்நுட்ப குழு மற்றும் புத்திஜீவிகளை இணைத்து ஆராய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் செல்லையா பிரேமகாந்த் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது சபை உறுப்பினர் சத்திய சுதர்சன் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் 5 ஜி அலைவரிசை கோபுரம் பிரதேச சபையின் அனுமதி இல்லாமல் அமைக்கப்படுவதாகவும் இந்த கோபுரத்தை அமைப்பதற்கு பொறுப்பானவர் பிரதேச சபை தவிசாளர் உடைய நண்பரெனவும் அவர் ஒரு பிரதேச சபையின் தவிசாளர் எனவும் மக்கள் தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த தவிசாளர், லாம்போல் என்று அழைக்கப்படுகின்ற இந்த போஸ்ட் தொடர்பாக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது எனவும், நாடு முழுவதும் இருக்கின்ற பகுதிகளில் மின்விளக்கு, சிசிடிவி கேமரா, நகர்ப்புற பகுதிகளில் அந்த பகுதியில் எல்பிஎன் திரை என்பனவற்றினை அதில் நிறுவி அந்தவேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அடிப்படையில் அந்த வேலைத்திட்டம் நடைபெற்றுக் கொண்டு வருகின்றது என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் எங்களுடைய பிரதேச சபையின் உடைய எல்லைக்குள் உடையார்கட்டு மற்றும் புதிய குடியிருப்பு ஆகிய இரண்டு பகுதிகளில் இரண்டு லாம்ப்போல் நிறுவப்பட்டிருக்கின்றது. இந்த விடயம் தொடர்பில் நாங்கள் அதை மறித்திருக்கிறோம்.

அதன் பின்னர் எங்களுக்கு அதற்கான கட்டட அனுமதிக்கான விண்ணப்பம் கோரப்பட்டிருக்கிறது அதிலே எந்தவிதமான 5ஜி தொடர்பான எந்த விதமான வார்த்தை பிரயோகங்களும் அதில் பயன்படுத்தப்படவில்லை
அது ஒரு நிறுவனத்தினுடையது.

லாம்ப்போல் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மின்விளக்கு சிசிடிவி கேமரா எல்ஈடி டிவி என்பவற்றில் எங்களுடைய அந்த இடத்திற்கு எது பொருத்தமோ அதை பொருத்துவதற்காகவே கோரப்பட்டிருக்கின்றது.

அந்தக் கட்டட அனுமதிக்கான விண்ணப்பங்கள் மாத்திரமே எங்களிடம் கோரப்பட்டிருக்கின்றது.

பொதுவாக நாட்டிலே 5ஜி தொழில்நுட்பம் எந்தவித அனுமதியும் அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

இதுகுறித்து சபையில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதை தொடர்ந்து, 5ஜி விவகாரம் தொடர்பாக பிரதேச சபையில் இருக்கின்ற தொழில்நுட்பக் குழு உள்ளிட்ட குழுக்களும், இந்த விடயம் தொடர்பான நிபுணர்களையும் அழைத்து ஆராய்ந்து ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. (நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!