தோட்ட மக்களுக்கும், இந்த நாட்டிற்கும் பெருந்தொகையான வருமானத்தினை ஈட்டித் தந்தது பெருந்தோட்டத் துறையாகும் எனத் தெரிவித்துள்ள மலையக மக்கள், தோட்ட நிர்வாகங்கள் மரங்களை வெட்டுவதில் காட்டும் அக்கறையை, தேயிலை பயிர் செய்கையை விருத்தி செய்வதில் காட்டுவதில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
பெருந்தோட்டத்துறை இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் முதுகெலும்பாக விளங்கியது.
பெருந்தோட்டங்களைச் சேர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் தங்களது ஜீவனோபாயமாக பெருந்தோட்டங்களையே நம்பி வாழ்ந்தனர்.
குறிப்பாக தேயிலை பயிர் செய்கையினை அதிகமான தொழிலாளர்கள் நம்பியிருந்தனர்.
காலமாக தோட்ட மக்களுக்கு உணவளித்து வந்த இந்த தேயிலை பயிர்ச்செய்கை தற்போது அழிந்து வருவதனை அவதானிக்க முடிகின்றது.
அரசாங்கம் பொறுப்பிலிருந்து பெருந்தோட்டத்துறை கம்பனிகளிடம் ஒப்படைக்கப்பட்டதன் விளைவாக இன்று ஒரு சமூகமே தொழில் இழக்கும் நிலைக்கு சிறிது சிறிதாக தள்ளப்பட்டுப்பட்டு வருகின்றனர்.
இது வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டு அந்த தொழிற்சாலைகளில் வேலை செய்து வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தொழில்களை இழந்துள்ளனர்.
இன்னும் பலர் தேயிலையின் மூலம் தங்களது வாழ்வாதாரத்தினை பூர்த்தி செய்து கொள்ள முடியாமையினால் தோட்டங்களை விட்டு தொழிலாளர்கள் வெளியேறிய வண்ணமே உள்ளனர்.
இதனால் பல தோட்டங்கள் மூடும் நிலையில் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவற்றுக்கெல்லாம் தொழிலாளர்கள் தேயிலை தொழிலில் ஈடுபட விருப்பமின்றி இருப்பதாக தோட்ட நிர்வாகங்கள் தெரிவித்து வந்த போதிலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையே காணப்படுகின்றன.
காரணம் இன்று தொழிலாளர்களில் அதிகமானவர்கள் தோட்டங்களில் வெளியேறி ஆயிரம் ரூபா சம்பளத்திற்காக தனியார் தோட்டங்களில் வேலை செய்து வருகின்றனர்.
அவர்களுக்கு பகல் உணவு மற்றும் போக்குவரத்து வசதிகள் தனியார் தோட்டங்கள் செய்து கொடுகின்றனர்.
அவ்வாறு தனியார் தோட்டங்கள் செயப்படும் அதேவேளை கம்பனிகளுக்கு சொந்தமான தோட்டங்கள் நாளாந்தம் தொழிற்சாலைகளை மூடுவதும் தேயிலை மலைகளை காடுகளாக மாற்றிவருவதனையே காணக்கூடியதாக உள்ளது.
ஆறுகள் ஓடைகள், அருவிகள் என பாய்ந்தோடிய அழகிய மலையகம் என்று உலக மக்களால் வர்ணிக்கப்பட்ட பிரதேசம் இன்று செழிப்பிழந்து காணப்படுகின்றன.
இவற்றிக்கெல்லாம் காரணம் என்ன? என்பது அனைவரதும் கேள்வியாகவே உள்ள நிலையில், நாட்டிக்கு வருமானத்தையும் வீட்டிக்கு உணவினையும் சூழலுக்கு அழகினையும் தேடித்தந்தது நன்கு செழித்து வளர்ந்த தேயிலையே. ஆனால் இந்த அழகிய தேயிலை இன்று கவனிப்பாரற்ற நிலைக்கு தள்ளப்பட்டு வருவது நாட்டுப்பற்றுள்ள அனைவர் மனதினையும் புண்படுத்தும் விடயமாகும்.
இந்நிலையில்தான், பெருந்தோட்டங்களை நிர்வகிக்கின்ற நிர்வாகங்கள் முற்று முழுவதுமாக லாபத்தினை மாத்திரம் நோக்காக கொண்டு இயங்குகின்றன என தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பெரும்பாலான தோட்டங்கள் தேயிலை துறையினை காப்பதற்கு பதிலாக அத்தோட்டங்களில் நீண்டு வளர்ந்த மரங்களை வெட்டித்தீர்ப்பதிலேயே கூடுதலான அக்கறை கொள்வதனை அண்மைக்காலமாக காணக்கூடியதாக உள்ளது.
அதிகமான தோட்டங்களில் காணப்படும் நூற்றுக்கணக்கான மரங்கள் நாளாந்தம் வெட்டப்படுகின்றன.
இதன் பின் விளைவு பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தொழிற்சங்கங்கள் தமது பிரதேசம் சூழல், தொழிலாளர்களின் பாதுகாப்பு,போன்றவற்றில் இதை விட அக்கறை செலுத்த வேண்டும் என தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (நி)