கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் எவ்வித அரசியல் தலையீடும் இல்லை -அரசு

கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலைமையை மதிப்பீடு செய்து அதற்கான உரிய நடவடிக்கையை சுகாதார பிரிவினரின் ஆலோசனையின் அடிப்படையில் அரசாங்கம் முன்னெடுப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் எந்தவித அரசியல் தலையீட்டுக்கும் இடமில்லை என்று அமைச்சரவை இணை பேச்சாளரும் பெருந்தோட்டத்துறை அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

மேலும், சமையல் எரிவாயு விலையில் மாற்றத்தை மேற்கொள்வதற்காக எந்தவித தீர்மானமும் அமைச்சரவையில் மேற்கொள்ளப்படவில்லை என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (04) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்த போதே இந்த விடயங்களை குறிப்பிட்டார்

ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கு அமைவாக கொவிட் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையும், ஜனாதிபதி செயலணியும் மிகவும் திட்டமிட்ட வகையில் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

வைத்தியசாலைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை 4,000-, 5,000 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது. விரைவில் இந்த பிரச்சினை தீர்க்கப்படும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.

பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்வதற்குத் தேவையான பரிசோதனை உபகரணங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களை துரிதமாகக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

தடுப்பூசிகளை தயாரிக்கும் இந்திய நிறுவனம் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் இரண்டாவது தடுப்பூசிகளை நம் நாட்டிற்கு வழங்குவதாக அவர்கள் உறுதியளித்தனர்.

தற்போது நாட்டில் 345,000 தடுப்பூசிகள் உள்ளன. கோவிஷீல்ட் தடுப்பூசிகளை வழங்கிய சில நாடுகளில் அவை மேலதிகமாக உண்டு. இந்த நாடுகளில் இருந்து அவற்றை பெற்றுக் கொள்வதற்காக தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

கொரோனா புதிய திரிபு கண்டறிப்பட்ட பின்னர் அரச ஆய்வு கூடங்களில் கொவிட் பி.சி.ஆர். பரிசோதனைக்கான கேள்வி நாளொன்றுக்கு 20,000 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களும் உண்டு.

அதனால், குறித்த தேவைக்கான பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்வதற்குத் தேவையான பரிசோதனை உபகரணங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களை துரிதமாகக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றும் அமைச்சரவை இணை பேச்சாளரும் பெருந்தோட்டத்துறை அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!