அம்பாறை கல்முனை வடக்கு தமிழ் மக்கள் நேற்றையதினம் பட்டாசுகள் கொழுத்திக் கொண்டாடினர்.
அம்பாறை கல்முனை வடக்கு உப தமிழ் பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கல்முனை வடக்கு தமிழ் இளைஞர்கள் வெடி கொழுத்தி தமது மகிழ்ச்சியை வெளயிட்டனர்.
நேற்று இரவு 9 மணியளவில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தலைமையில் ஒன்று கூடிய இளைஞர்கள் குழு, கல்முனை தரவை பிள்ளையார் கோயில் முன்றல், கல்முனை ஐக்கிய சதுக்க முன்றல், கல்முனை வாடி வீட்டு சுற்றுவட்டம் உள்ளிட்ட பகுதியில் வெடிகள் கொளுத்தி ஆரவாரம் செய்தனர்.
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு நீதி கோரி அண்மையில் உண்ணாவிரதப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், கல்முனை பிரதேச மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமும் அரசிடமும் தொடர்ந்து தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுமாறு தொடர் அழுத்தத்தையும் பிரயோகித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (நி)