கரைதுறைப்பற்று பிரதேச சபை அமர்வு!

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இன்று இடம்பெறவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் அமைப்பினை பிரதிநித்துவப்படுத்தும் கனகையா தவராசா, கடந்த மூன்று வருடங்களாக கரைதுறைப்பற்று பிரதேசசபையின் தவிசாளராக பதவிவகித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கிடையில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய தமிழீழ விடுதலை இயக்கத்தை சார்ந்தவர்களுக்கு தவிசாளர் பதவி வழங்கும் நோக்கோடு அவர் தனது பதவி விலகலை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.

அந்த வகையில் பிரதேச சபையின் புதிய தவிசாளருக்கான தேர்வு இன்று இடம்பெறவுள்ளது.

கடந்த 09.04.2021 அன்று வெளியிடப்பட்ட, அதிவிசேட வர்த்தமானியிலும் கரைதுறைப்பற்றுப் பிரதேசசபையின் புதிய தவிசாளர் தேர்வு இடம்பெறுமென அறிவித்தல் வெளியாகியுள்ளது.

இந் நிலையிலேயே தவிசாளருக்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் புதிய தவிசாளர் தேர்வு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்ந்தோர் ஒன்றுகூடி, கலந்துரையாடல் ஒன்றினை நடாத்தியுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபையின் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்களும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் பதவியை கைப்பற்ற பொதுஜன பெரமுன கட்சியும் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

கரைதுறைப்பற்று பிரதேச சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு -09, ஈழமக்கள் ஜனநாயக கட்சி -02, தமிழர் விடுதலை கூட்டணி-02, சுயேட்சை குழு-03, பொதுஜன பெரமுன -02, சிறிலங்கா சுதந்திர கட்சி -01, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -01, ஐக்கிய தேசிய கட்சி -03, சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் -01 என 24 உறுப்பினர்கள் உள்ளனர்.

சபையில் மூவர் தவிசாளர் பதவிக்கு போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!