யாழ்.மேயரின் கைது மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சி : சஜித்

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனைக் கைது செய்ததன் மூலம் நாட்டு மக்களைத் திசை திருப்பி, 2019 ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள சூத்திரதாரிகள் தொடர்பில் விசாரிப்பதை அரசு நிறுத்தியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். ‘யாழ். மாநகர முதல்வர் தனது கடமைகளை மேற்கொண்ட விதம் குறித்து சிக்கல்கள் இருந்தால், பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் மூலம் பொருத்தமான விசாரணையை மேற்கொண்ட பின்னரே ஒரு முடிவை எட்ட வேண்டும்.

அத்தோடு யாழ்ப்பாணத்தில் உள்ள அதிகாரிகளின் சீருடை குறித்து தனி விசாரணை நடத்தியிருக்கலாம். அதைவிடுத்து இந்த விடயத்தை வைத்துக் கொண்டு மக்களைத் திசை திருப்பும் செயலில் அரசு ஈடுபட்டுள்ளது. எனினும், ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளை அரசு வெளிப்படுத்தும் வரை மக்கள் பொறுமையின்றி காத்திருக்கின்றனர். அரசியல் நாடகங்களை நடத்துவதற்குப் பதிலாக அரசு தனது கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.
ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட ஒரு நபரை அரச தரப்பு தாக்குதல்களின் பின்னணியிலிருந்த
சூத்திரதாரி என்று பெயரிட்டிருப்பது ஆச்சரியமாக இருக்கின்றது. இவ்வாறான பொய்யான தகவல்களைக் கூறி பொதுமக்களை அரசு தவறாக வழிநடத்துகின்றது. இதற்குப் பதிலாக, ஈஸ்டர் தாக்குதல்களுக்குக் காரணமான நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை விதிக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!