புகையிரதக் கடவை இன்றி அச்சத்தில் முல்லை. பனிக்கன்குளம் மக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில் புகையிரத வீதியின் 302.5 ஆவது கிலோமீற்றர் பகுதியில் புகையிரத கடவை ஒன்றினை அமைத்து தருமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த பகுதியில் பாதுகாப்பான புகையிரதக் கடவை இல்லாததன் காரணமாக அவ்வீதியை பயன்படுத்தும் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பலர் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

புகையிரதக் கடவை அமைத்து தருமாறு பல தடவைகள் பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கபடுகிறது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் பல தடவைகள் குறித்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டு, அவர் புகையிரத திணைக்களத்துக்கு குறித்த விடயம் தொடர்பில் பல தடவைகள் கடிதங்கள் அனுப்பியும் இதுவரை புகையிரத திணைக்களத்தினால் சாதகமாக எந்த பதிலும் வழங்கப்படவில்லை.

பனிக்கன்குளம் கிராம அறிவுநதி சனசமூக நிலையத்தினால் குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமாகிய காதர் மஸ்தானிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அண்மையில் இடம்பெற்ற ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானிடத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திலும் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. ஆனால் பல ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் எவ்வித செயற்பாடுகளும் இடம்பெறாமையால் மக்கள் அச்சத்துடன் வாழ்வதாகவும் மிக விரைவில் தீர்வாக பாதுகாப்பான புகையிரத கடவை ஒன்றை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!