யாழ். மாநகர காவல் படையின் சீருடை பறிமுதல்!

யாழ்ப்பாணம் மாநகரசபையால் அமைக்கப்பட்ட காவல் படையின், சீருடைகள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு மாநகர காவல் படையின் கடமைகளை இடைநிறுத்துமாறும், வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய, யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் மாநகர ஆணையாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத விசாரணைப் பிரிவு, இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவு மற்றும் ஏனைய பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராயப்படுவதன் காரணமாகவே, சீருடையை தொடர்ந்து பயன்படுத்த முடியாது எனவும் அத்தோடு குறித்த செயற்பாட்டினை தற்காலிகமாக இடை நிறுத்துமாறும் கோரப்பட்டுள்ளது. இலங்கை பொலிஸுக்கு ஒத்ததாக யாழ்ப்பாணம் மாநகர காவல்துறை அமைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறையின் சீருடையை ஒத்த சீருடைய அணிந்திருந்தனர் என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தநிலையில் யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் நேற்றிரவு யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு பல மணி நேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். மாநகர சபை ஆணையாளர் விசாரணைக்கு அழைக்கப்பட்டதை அடுத்து, மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்திருந்தார். யாழ்ப்பாணம் மாநகரில் இடம்பெறும் சுகாதார விதிமீறல்கள் மற்றும் போக்குவரத்து இடையூறு போன்றவற்றைக் கண்காணிக்கும் வகையில், யாழ்ப்பாணம் மாநகர சபையால் காவல் படையொன்று அமைக்கப்பட்டுள்ளதாக மாநகர முதல்வர் நேற்றைய தினம்
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!