யாழில் மேலும் 129 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணத்தில் மேலும் 129 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 154 பேருக்கு கொரொனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜெயவர்த்தனபுர ஆய்வுகூடம், யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிடீசாதனைகளில் இந்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர ஆய்வுகூடத்தில் ஆயிரத்து மூன்று பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. அதில் 129 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் பாற்பண்ணை – பாரதிபுரம் பகுதியில் 88 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 12 பேருக்கும், யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 26 பேருக்கும், சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் 607 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 28 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் 25 பேருக்கும், மன்னாரில் இருவருக்கும், வவுனியாவில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உள்ளமை குறித்த பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. ‘யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நோயாளர் விடுதியில் நான்கு பேருக்கும், உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 9 பேருக்கும், சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் மாநகர கடைத் தொகுதியைச் சேர்ந்தவர்கள். தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்குத் தொற்று உறுதிப்படுத்தக்கட்டுள்ளது. அவர்கள் இருவரும் சுயதனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்டவர்கள். நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஆறு பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் நால்வர் யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலையங்களைச் சேர்ந்தவர்கள். தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னார் வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது’ என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார். இதேவேளை கடந்த 14 நாட்களில் யாழ்ப்பாணம் மாநகர கடைத்தொகுதிகளைச் சேர்ந்த 87 பேருக்குத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!