அமைச்சர் மஹிந்தானந்த மட்டக்களப்புக்கு விஜயம்

மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் கச்சான் செய்கையை மேம்படுத்த மேலும் நூறு நபர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்தா அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் கதிரவெளியில் கச்சான் பதனிடும் நிலையம் மற்றும் ஒன்றுகூடல் மண்டபம் ஆகியவற்றைத் திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது வாகரை பிரதேசத்திலுள்ள ஆறு கச்சான் செய்கை விவசாய சங்கத்திலுள்ள கச்சான் விவசாயிகளின் நன்மை கருதி
40 மில்லியன் ரூபாய் நிதியில், கச்சான் உடைக்கும் இயந்திரம், கச்சான் பிரிக்கும் இயந்திரம், உழவு இயந்திரம்,
நிலத்தினை பதப்படுத்தும் இயந்திரங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

விவசாய அமைச்சின் விவசாய நவீன மயமாக்கல் செயற்றிட்டத்தின் மூலம் 147 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 107 மில்லியன் ரூபாய் செலவில் வாகரை பிரதேசத்திலுள்ள ஆறு கச்சான் செய்கை விவசாய சங்கத்திலுள்ள நூறு விவசாயிகளுக்கு நீர் பாய்ச்சும்; இயந்திரம்,
தூவல் நீர்பாசனம், கச்சான் விதை உள்ளீடுகள் உட்பட்ட பொருட்கள் வழங்கப்பட்டதுடன், விவசாயிகள் போக்குரத்து கருதி உட்கட்டுமான வசதிகளாக பாலம் மற்றும் வீதி என்பன அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜகம்பத், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் கலாமதி பத்மராஜா, விவசாய நவீன மயமாக்கல் செயற்றிட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஆர்.ஆர்.ஏ.குகான் விஜயகோன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே,
நாட்டில் கொரோனா பாதுகாப்பு பிரச்சனைக்கு மத்தியிலும் அரசாங்கம் மக்களின் தேவைகளை கண்டறிந்து பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

தங்களுடைய கச்சான் உற்பத்திகளை விற்பனை செய்வதற்கு நாங்கள் தற்போது வியாபார நிலையங்களை நிறுவி உள்ளோம்.
அதனால் உங்கள் உற்பத்திகளை நாங்களே பெற்றுக் கொள்வோம். நீங்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.

நீங்கள் என்னிடம் கோரிய கோரிக்கைக்கு அமைவாக இன்னும் நூறு நபர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்.

அத்தோடு நூறு விவசாயிகளுக்கு நீர் பாய்ச்சும்; இயந்திரங்களும் வழங்கி வைக்கப்படும்.

இந்த அரசாங்கத்தின் மூலம் மக்களின் தேவைகளை நன்கு அறிந்து கொண்டு சேவைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

நூறு குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கி எமது அரசாங்கம் விவசாயத்தினை ஊக்குவித்துள்ளது என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!