மட்டு. பாலக்காடு பிரதேசத்திற்கு விசேட குழுவினர் விஜயம்

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வேப்பவெட்டுவான் பாலக்காடு பிரதேசத்தினைப் பார்வையிடுவதற்காக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாளேந்திரன் தலைமையிலான குழுவினர் களவிஜயம் மேற்கொண்டனர்.

வேப்பவெட்டுவான் பாலக்காடு பிரதேசத்தில் வயல் திருத்தம் என்ற பெயரில் சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுவதாக அப்பிரதேச மக்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் கள விஜயம் மேற்கொண்டதன் அடிப்படையில் கடந்த 2021.03.19ம் திகதி இடம்பெற்ற ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் குறித்த பிரதேசத்தில் மண் அகழ்ந்து இலுப்படிச்சேனை வேப்பவெட்டுவான் வீதியினூடாக மண் ஏற்றுதல் நடவடிக்கை தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டிருந்ததுடன் விடயத்தினை ஆராய்வதற்காக ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான எஸ்.வியாளேந்திரன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அதிகாரிகளும் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.

அதனடிப்படையில் குறித்த பிரதேசத்தினைப் பார்வையிடுவதற்காக குழுவினர் களவிஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இவ்விஜயத்தின் போது இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாளேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம் ஜனா, இரா.சாணக்கியன், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, பிரதேச அபிவிருத்திக் குழுக்களின் பிரதித் தலைவர் சந்திரகுமார், ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர், புவிச்சரிதவியல் திணக்களம் மாவட்டப் பணிப்பாளர், நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், வீதி அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனார்.

குழுவினர் பிரதேசம் தொடர்பில் பார்வையிட்டதுடன், கடந்த வாரம் செல்லும் போது குளம் போலக் காட்சியளித்த இடம் தற்போது மண் இட்டு நிரப்பப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு நிரப்புவதற்கான மண் எங்கிருந்து பெறப்பட்டது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.

அத்துடன் வயல் திருத்தம் என்ற பெயரில் அளவுக்கு மேலும் அதிகமான ஆழத்தில் மண் தோண்டி எடுக்கப்படுவதால் அண்மையில் காணப்படுகின்ற வயல் நிலங்களுக்கு நீர் செல்லும் நிலைமையும் குறைவடைகின்றது போன்ற குற்றச்சாட்டுகள் மக்கள் பிரதிநிதிகளாலும், விவசாய அமைப்புகளாலும் முன்வைக்கப்பட்டன.

அத்துடன் குறித்த நடைமுறை தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

இதன்போது மண் அகழும் அவ்விடத்தின் உரிமையாளர் என்று சொல்லப்படுபவர் மற்றும் மண் அகழும் பணிகளில் ஈடுபடுபவர்கள் குறித்த இடத்தில் பிரதிநிதிகளுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்படி குறித்த இடத்தில் கலந்துரையாடலை மேற்கொள்ள முடியாத நிலையில் பிரதேச செயலகத்தில் கலந்துiராயாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது.
பின்னர் மேற்படி வேப்பவெட்டுவான் பிரதேசத்தில் வயல் திருத்தம் என்ற பெயரில் மண் அகழ்வு செய்யப்பட்ட மேலுமொரு இடமும் பிரதிநிதிகளால் பார்வையிடப்பட்டது.

தொடர்ந்து ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலகத்தில் இது தொடர்பான விசேட கலந்துரையாடலும் இடம்பெற்றது.

இதன்போது மேற்படி நிலைமைகள் தொடர்பில எவ்வாறான தீர்மானங்களை மேற்கொள்ளலாம் என மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் இணைந்து கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனர்.

இதன்படி வேப்பவெட்டுவான் பிரதேசத்தில் இலுப்படிச் சேனை வேப்பவெட்டுவான் வீதியினூடாக மண் ஏற்றும் செயற்பாட்டுக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் விதிக்கப்பட்ட தடை அப்படியே நீடிப்பதெனவும், குறித்த தீர்மானத்தை உரிய முறையில் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.

அத்துடன் கொடவெலி எனப்படும் வயல் பிரதேசங்களில் தேங்கிக் கிடக்கும் மண்ணை அகழ்வதற்கான அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இது தொடர்பில் தற்போது பதினொரு இடங்கள் கொடவெலி மண் அகழ்வுக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், அப்பிரதேசங்களிற்கு களவிஜயம் மேற்கொண்டு ஆராய்ந்து. அனுமதிப்பத்திரத்திற்கு முரணான வகையில் செயற்படும் பிரதேசங்களில் அனுமதிப்பத்திரங்களை உடன் இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகப் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இதன்படி பிரதேச செயலாளர், புவிச்சரித வியல் திணக்களம், போன்ற திணைக்கள அதிகாரிகள் ஒன்றிணைந்த குழுவொன்றும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!