கடந்த 24 மணி நேரத்தில், 8 பேர் கைது : ரோஹண

கொழும்பு டாம் வீதியில், தலை அற்ற நிலையில், சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பான விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இன்று, ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள காணொளி பதிவில் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த மார்ச் மாதம் 1ம் திகதி டாம் வீதி பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட பெண்ணொருவரின் சடலம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும் குறித்த பெண்ணின் தலை இன்னும் கணடறியப்படவில்லை.

தலையை கண்டறிவதற்கான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

இருப்பினும் குறித்த பெண்ணின் தாயின் உயிர் கூட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு ஏனைய காரணிகளையும் முன் வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில் இலங்கை பொலிஸாரினால் போதைப்பொருட்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் பல தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நேற்றைய தினம் விசேட சுற்றிவளைப்பொன்று மாத்தறை பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.

இது தவிர்த்து நேற்று பிற்பகல் 480 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் 5 கிராம் போதைப்பொருட்களுடன் நேற்று மாலை நேரத்திலும் நபரொருவர் கைது செய்யப்பட்டார்.

தொடர்ச்சியாக கண்டி தென்னக்கும்புற பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 25 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 30 வயது நிரம்பிய முச்சக்கர வண்டி சாரதியொருவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபர் முச்சக்கர வண்டியில் போதைப் பொருட்களை மறைத்து வைத்து பயணம் செய்திருந்தமையினாலேயே கைது செய்யப்பட்டார்.

இவ்வாறான செயற்பாடுகளுக்கெதிரான சுற்றிவளைப்புக்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.

இந்த நிலையில் நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் தொடர்பில் கண்காணிப்பதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் பல தொடர்ச்சியாக இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளிகளை பேணத் தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30ம் திகதியிலிருந்து தற்போது வரையில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளி பின்பற்றப்படாமை போன்ற குற்றச்சாட்டுக்களுக்காக மொத்தமாக 3,294 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனவே அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக்வசம் அணிவதோடு சமூக இடைவெளிகளை பின்பற்றிக்கொள்ளுங்கள்

மேலும் இலங்கை பொலிஸாருக்கு கொவிட் தொற்றுக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்கும் செயற்பாடுகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதுவரையில் மொத்தமாக 33,000 பொலிஸாருக்கு இந்த கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வழங்கப்பட்ட தடுப்பூசிகள் பொலிஸ் வைத்தியசாலைகளில் வைத்து வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!