லிந்துலை நகர சபை தவிசாளர் தெரிவு, ஒத்திவைப்பு!

நுவரெலியா லிந்துலை நகர சபைக்கான புதிய தவிசாளர் தெரிவு, எதிர்வரும் 5 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, மத்திய மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் மேனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

தலவாக்கலை லிந்துலை நகர சபை கேட்போர் கூடத்தில், இன்று இடம்பெற இருந்த, புதிய தவிசாளர் தெரிவுக்கான தேர்தல், போதியளவு உறுப்பினர்கள் சமூகம் அளிக்காததை அடுத்து, ஆணையாளர் ஒத்திவைத்தார்.

தவிசாளராக இருந்த அசோக சேபால மீது முன்வைக்கப்பட்டிருந்த பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுத்து, அவர் உடன் அமுலுக்கு வரும் வகையில், தவிசாளர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டு, தலவாகலை லிந்துலை நகர சபையின், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் எல்.பாரதிதாசன், இடைக்கால தவிசாளராக நியமிக்கப்பட்டு, மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே, வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.

அதன் பின்னர், அசோக சேபால மீது முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய நியமிக்கப்பட்டிருந்த குழுவின் அறிக்கையில், அசோக சேபால மீண்டும் தலைவராக நியமிக்கப்பட கூடாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து, புதிய தவிசாளர் தெரிவுக்கான தேர்தலை, இன்று நடத்த அறிவிப்பு வெளியானது.

அந்த வகையில், பலத்த பொலிஸ் பாதுகாப்புடன், மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மேனக ஹேரத் தலைமையில், தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கான, புதிய தவிசாளர் தெரிவுக்கான வாக்களிப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அங்கு 3 உறுப்பினர்கள் மாத்திரமே சமூகம் அளித்திருந்தனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களான சந்தன பிரதீப் குணதிலக, பஷான் நிமாலக, பிரசன்ன விதானகே ஆகிய மூவரே சமூகம் அளித்திருந்ததுடன், 3 பேரும், நகர சபை தவிசாளர் தெரிவுக்கான போட்டியாளர்கள் ஆவர்.

தலவாக்கலை லிந்துலை நகர சபை உறுப்பினர்களாக 11 பேர் உள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மூவர், ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் இருவர், மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர் மற்றும் சுயேச்சை குழு உறுப்பினர் ஒருவர் என, 8 உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை.

அதனால், தேர்தலை நடாத்தி தவிசாளரை தெரிவு செய்வதற்கான பெரும்பான்மை இல்லை என தெரிவித்த, மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மேனக ஹேரத், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதிக்கு, புதிய தவிசாளர் தெரிவுக்கான தேர்தலை ஒத்திவைத்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!