கூட்டறிக்கையே நெருக்கடிக்குக் காரணம்- ரணில்

நாட்டில் போர் முடிவடைந்த பின்னர், அப்போதைய ஐ.நா சபையின் செயலாளராக இருந்த பான் கீ மூனுடன் இணைந்து மஹிந்த ராஜபக்ஷ செய்த கூட்டறிக்கையே, இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு காரணம் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

2009இல் போர் முடிவடைந்த பின்னர் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ – மூனுடன் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில் மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்படும் என்று இணங்கியமையே இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலைக்குக் காரணம். இதனால், அதன்போது இணங்கியவாறு செயற்படுவதைத் தவிர இலங்கைக்கு ஐ.நா மனித உரிமைகள் சபையில் இருந்து தப்பிக்க வேறு வழியில்லை என முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அன்று மஹிந்த ராஜபக்ச மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்படும் என்று கூறியிருக்காவிட்டால், தற்போதுள்ள அழுத்தங்கள் இருந்திருக்காது என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் கடந்த நல்லாட்சி அரசின்போது, சர்வதேச சமூகத்துடன் எந்தவொரு பிரச்சினையையும் ஏற்படுத்திக்கொள்ளாது செயற்பட்டோம். இதன்மூலம் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையையும் அதிகரித்துக்கொள்ள முடியுமாக இருந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், முன்னைய ராஜபக்ச அரசு, ஐ.நா.செயலாளராக இருந்த பான் கீ மூனுடனான கூட்டு அறிக்கைக்குக் கட்டுப்பட்டுள்ளதால், அதனைச் செய்யாது அழுத்தங்களில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!