தோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தாக்கப்பட்டால், தகுந்த நடவடிக்கை : தயால் குமாரகே

தோட்டங்களில் பணிபுரியும் தோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு, உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும், அவ்வாறு இல்லாவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சிலோன் தோட்ட அதிகாரிகளின் சங்க தலைவர் தயால் குமாரகே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று, சாமிமலை, ஓல்டன் மற்றும் ஏனைய பகுதிகளில், தோட்ட அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தோட்ட அதிகாரிகள், ஹட்டன் மல்லியப்பூ சந்தியில் கறுப்பு பட்டி அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர், டிக்கோயா தரவலை டி.எம்.சி.சி விளையாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

அண்மைக் காலமாக, தோட்டத்துறைகளில் பணிபுரியும் எமது ஊழியர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இதில் குறிப்பாக, மிக அண்மையில், ஓல்டன் தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர், மிகவும் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டனர்.

இதனை நாங்கள், தொடர்ந்தும் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது.

நாங்கள், தோட்டங்களை பாதுகாத்து, அதில் பணிபுரிவதற்கே வந்திருக்கிறோம்.

ஆகவே, எங்களை அவர்கள் தாக்குவதை அனுமதிக்க முடியாது.

அவ்வாறு தொடர்ந்து நடைபெற்றால், பாரிய பிரிச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.

நாங்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தால், தோட்டங்கள் இயங்காது, நாட்டின் பொருளாதாரம் தான் பாதிக்கப்படும்.

கடந்த கொரோனா காலத்தில் கூட, தோட்டத்துறை மாத்திரம் தான், இந்த நாட்டிக்கு வருமானத்தை தேடிக் கொடுத்தது.

ஆகவே, அரசாங்கம் எங்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக, இதை விட கரிசனையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

இதற்கு முன்னர், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதில்லை.

தொழிலாளர்களும் நிர்வாகமும் மிக ஒற்றுமையாகத்தான் இருந்தன.

ஆகவே, இதன் பின்னணியில், தொழிற் சங்கங்கள் மற்றும் வேறு சக்தியும் செயற்படுவதாகவே நாங்கள் கருதுகிறோம்.

எங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் பிரச்சினைகள் ஏற்பட்டால், அதனை பேசித்தீர்த்து கொள்வதற்கு, எத்தனையோ வழி இருக்கிறது.

அவ்வாறு இல்லாது, வன்முறைகளில் ஈடுபட்டால், இந்த நாட்டின் பொருளாதாரமும், அவர்களின் பொருளாதாரமும் தான் பாதிக்கும்.

கடந்த காலங்களில், கொழும்புக்குத் தேயிலை கொண்டு சென்ற லொறி ஒன்றை, ஹட்டன் பகுதியில், ஒரு பிரதேச சபைத் தலைவர், திருப்பி அனுப்பி வைத்தார்.

இதன் நஸ்டத்தை யார் கொடுப்பது.

ஆகவே எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், பேசித் தீர்ப்பதற்கே நாம் முயற்சிகின்றோம்.

தொழிற்சங்கங்களும் இதனை உணர்ந்து செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

நாங்கள் துப்பாக்கி கேட்டதாக, ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

நாங்கள் துப்பாக்கி கேட்கவில்லை.

எங்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கேட்டோம்.

150 ஆண்டுகளுக்கு மேலாக தோட்டங்கள் காணப்படுகின்றது.

சில தோட்டங்களில் துப்பாக்கிகள் இருக்கின்றது.

அது சம்பந்தமாக, எங்களுக்கு பயிற்சிகள் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமாயின், அது வேறு விடயம்.

நாங்கள் ஆயுதம் எதுவும் கேட்கவில்லை.

எங்களுடைய பாதுகாப்பை உறுத்திப்படுத்த வேண்டும் என கேட்கின்றோம்.

என குறிப்பிட்டுள்ளார்.

 

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!