உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலை நடத்திய உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என கோரி, எதிர்வரும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, கறுப்புக் கொடிப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக, கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
நேற்றுக் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவினால் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், நாட்டின் தேசிய பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டிருக்கும் குற்றப் புலனாய்வு திணைக்களம், பயங்கரவாத தடுப்புப் பிரிவு, அரச புலனாய்வுத்துறை ஆகியன, இந்த ஈஸ்டர் தாக்குதல் விவகார விசாரணையை, ஆழமாக நடத்தியதா என்கிற சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது.
ஈஸ்டர் தாக்குதலை தலைமை தாங்கிய நபர்களை கைது செய்வதற்காகவும் கண்டுபிடிக்கவும், அரச புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்ததா என்பதை தெளிவாக அறிவிக்க வேண்டும்.
அவ்வாறு மேற்கொண்டிருக்கின்றதா அல்லது ஏனோ தானோவென்று செயற்பட்டதா?
இத்தாக்குதலுக்கு கட்டளையிட்டவர்கள், உதவியவர்கள், திட்டமிட்டவர்கள் மற்றும் தொடர்புபட்டவர்கள் என, பல்வேறு பிரிவுகளில் விசாரணைகளை நடத்த தடையாக இருந்தவர்கள் என, விசாரணைகள் நடத்தியாக வேண்டும்.
விசாரணைகளை திறம்பட செய்யாமல் இருக்க, அரசியல் அழுத்தங்கள் இருந்ததாக கூறப்படுகின்றது.
அந்தவகையில் 2 வருடங்களாகியும், இன்னும் சூத்திரதாரிகள் கைதாகவில்லை’ என குறிப்பிட்டுள்ளார்.