ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு, கிளிநொச்சி இரணைதீவு பொருத்தமான இடமில்லை – டக்ளஸ் தேவானந்தா

கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கு, கிளிநொச்சி இரணைதீவு பொருத்தமான இடமில்லை என, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் எடுத்துரைக்கப்படடுள்ளது.

இந்த விடயம் தொடர்பில், அமைச்சரின் ஊடகப்பிரிவு, ஊடகங்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களை, இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், சிறுபான்மையின மக்கள் மத்தியில் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியாருடன் தொடர்புகொண்ட கடற்தொழில் அமைச்சர், குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

இதன் போது, இரணைதீவு பிரதேசத்தில், நீண்ட காலத்திற்குப் பின்னர் மக்கள் குடியேறுவதற்கு ஆர்வம் செலுத்தி வருவதையும், கடற்படையினர் அங்கு நிலைகொண்டிருப்பதையும், கடற்தொழில் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இரணைதீவு கடலட்டை ஏற்றுமதிக் கிராமத்தின் ஊடாக, வருடந்தோறும் சுமார் 25 ஆயிரம் அமெரிக்க டொலருக்கு மேற்பட்ட அந்நியச் செலாவணியை பெற்றுக் கொள்வதற்கும் திட்டமிடப்பட்டள்ள நிலையில், குறித்த தீர்மானம் தேவையற்ற அசௌகரியங்களை ஏற்படுத்தும் என, அமைச்சர் எடுத்துரைத்துள்ளார்.

குறித்த கருத்துக்களை, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் செவிமடுத்ததுடன், மாற்று ஏற்பாடு தொடர்பாக ஆராய்வதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளமையால், சிறுபான்மை மக்களின் உணர்வுகளை பாதிக்காத வகையிலான இறுதித் தீர்மானத்தை, அரசாங்கம் மேற்கொள்ளும் என, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!