ஓமான் வளைகுடாவில், இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல் மீது, கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில், ஈரான் இருப்பதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சுமத்தியுள்ளார்.
இஸ்ரேலிய பொது ஒளிபரப்பு நிறுவனமான கானுக்கு, இன்று வழங்கிய நேர்காணலில், இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
எனினும், அந்த கூற்றுக்கு, அவர் எந்த ஆதாரமும் வழங்கவில்லை.
‘எம்.வி.ஹீலியோஸ் ரே’ என்ற வாகன – சரக்கு கப்பல், கடந்த வெள்ளிக்கிழமை இரவில், வெடிப்பு சம்பவத்தினால் பாதிக்கப்பட்டது.
இதன் போது, மேல் புறங்கள் சேதமாக்கப்பட்டதாக, அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதனையடுத்து, தாக்குதலுக்கு உள்ளான கப்பல் நேற்று பழுதுபார்க்க, டுபாய் துறைமுகத்தை சென்றடைந்தது.
இந்த வெடிப்புக்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
பாதுகாப்பு அமைச்சர் பென்னி காண்ட்ஸ், வெடிப்பிற்கு ஈரான் தான் காரணம் என, ஒரு ஆரம்ப மதிப்பீட்டில் கண்டறியப்பட்டதாக, சனிக்கிழமை தெரிவித்தார்.
அதேவேளை, அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலிய தூதர், தெஹ்ரானை வெடிப்புக்கு குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால், பிராந்தியத்தில் பாதுகாப்பு கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில், இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் டுபாய்க்கு சென்றுள்ளதாக, ஹாரெட்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்குள், நாட்டின் நான்காவது தேர்தலில் மறுதேர்தலை எதிர்பார்க்கும் இஸ்ரேலிய பிரதமர், இதற்கான பதிலை எவ்வாறு வழங்கப் போகின்றார் என எதிர்பார்க்கப்படுகின்றது.