நாய் குரைக்கின்றது என்பதற்காக நின்றுக்கொண்டிருக்க நேரம் இல்லை எனவும் தாம் பயணத்தை தொடரப் போவதாகவும் தமது கட்சியின் பயணம் சரியானதா என்பதை மக்களே தீர்மானிப்பார்கள் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
பல்வேறு அணிகளை பயன்படுத்தி சுமத்தும் குற்றச்சாட்டுக்களுக்கு ஏமாற வேண்டாம்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, கட்சி என்ற வகையில் ஆட்சி அமைக்கும் முன்னர் நாட்டில் அனைத்து துறைகளிலும் உள்ள நிபுணர்களை அழைத்து நாட்டை எப்படி முன்னேற்றுவது, நாட்டின் எதிர்காலத்தை எப்படி உருவாக்குவது என்பதை கேட்டறிந்து, நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய வேலைத்திட்டத்தை முன்வைத்தது.
அதுவே ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்வைத்த சௌபாக்கிய நோக்கு என்ற வேலைத்திட்டம்.
சௌபாக்கிய நோக்கு வேலைத்திட்டத்தின் மூலம் நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவது தொடர்பாக உறுதிமொழியை மக்களுக்கு வழங்கினோம்.
அரசாங்கம் என்ற வகையில் அந்த உறுதிமொழிகளை நிறைவேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்.
எதிர்க்கட்சியில் இருந்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
எம்.சீ.சீ. உடன்படிக்கை தொடர்பாக பெரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
அரசாங்கம் என்ற வகையில் அதனை சுட்டிக்காட்டினோம்.
எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டு புஷ்வாணமாகி போனது.
கொரோனா சம்பந்தமாகவும் பெரிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
தடுப்பூசியை கொண்டு வர முடியவில்லை என்று குற்றம் சுமத்தினர்.
எனினும் அதிகமான ஆபத்தை எதிர்நோக்கும் நபர்கள் உட்பட சாதாரண மக்களுக்கும் தடுப்பூசியை வழங்க அரசாங்கத்திற்கு முடிந்துள்ளது.