முல்லைத்தீவு மாவட்டத்தில் காடுகள் அழிக்கப்பட்டு காணிகள் அபகரிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மணவாளன் பட்டமுறிப்பு கிராமத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஒருவரால் சுமார் 20 ஏக்கர் வரையான காடுகள் அழிக்கப்பட்டு காணிகள் அபகரிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பல மாதங்களாக கனரக இயந்திரங்களைக் கொண்டு வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் எல்லைகளையும் தாண்டி காடுகள் அழிக்கப்பட்டு காணிகள் அபகரிக்கப்படுகின்றபோதும் பொலிசாரோ வனவளத் திணைக்களமோ பிரதேச செயலகமோ இன்றுவரை எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருப்பதாக பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த பகுதியில்சுமார் 20 ஏக்கருக்கு மேற்பட்ட காடுகள் அழிக்கப்பட்டு இருக்கின்ற போதும் இதற்கான எந்த விதமான ஆவணங்களும் இல்லாத நிலை காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஊடாக குறித்த இடிக்கப்பட்ட காடுகளுக்கு உரிய ஆவணங்கள் தொடர்பிலான தகவல்கள் கோரப்பட்டபோதும் இன்று வரை பிரதேச செயலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கான பதில்களை தராமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றமை பிரதேச செயலகத்தின் அதிகாரிகளும் இந்த காடழிப்பு நடவடிக்கைக்கு உடந்தையாக இருக்கிறார்களா என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்தி இருப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே குறித்த மணவாளன் பட்டமுறிப்பு பகுதியில் குறித்த பிரதேச சபை உறுப்பினரால் பிடிக்கப்பட்டிருக்கின்ற 20 ஏக்கருக்கு மேற்பட்ட அளவிலான இந்த காடுகள் எவ்வாறு இடிக்கப்பட்டது இதற்கான ஆவணங்கள் இல்லை எனில் இதற்கு துணைபோன அதிகாரிகளுக்கு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் மிக விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏழை மக்களுக்கு வாழ்விடங்களுக்கு உரிய காணிகளை கூட பெற்றுக் கொடுக்க முடியாத நிலையில் இவ்வாறு பண பலத்தை பயன்படுத்தி இடம்பெறுகின்ற நடவடிக்கைக்கு உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்காமல் மௌனமாக இருக்கின்றமை தொடர்பில் மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!