உலக சுற்றாடல் தினத்தை கொண்டாடும் முகமாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் செயற்திட்டங்களுக்கு வடமாகாணத்தின் பங்களிப்பினை வழங்கும் நோக்கிலும் கண்டி – யாழ் பிரதான வீதியான A9 வீதியின் வவுனியா தொடக்கம் இயக்கச்சி வரையான வீதியின் இருமருங்கிலும் மரக்கன்றுகளை நாட்டும் ஆரம்ப செயற்திட்டம் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் A9 வீதியின் மாங்குளம் 226ஆவது மைல்கல் பிரதேசத்தில் இன்று இடம்பெற்றது.
மைத்திரிபால சிரிசேனவின் எண்ணக் கருவில் உருவான நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற அதேவேளை அதில் ஒரு அங்கமாக உலக சுற்றாடல் தினத்தை கொண்டாடும் முகமாகவும் இத்தினைத்தை முன்னிட்டு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் செயற்திட்டங்களுக்கு வடமாகாணத்தின் பங்களிப்பினை வழங்கும் நோக்கிலும் இன்று காலை இந்த மரநடுகைத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த வகையிலேயே முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரம் மரக் கன்றுகளை நாட்டும் திட்டம் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது இந்த ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் யாழ் இந்திய துணை தூதர் பாலச்சந்திரன் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் வடக்கு மாகாணசபையின் முன்னாள் அவைத் தலைவர் சி வி கே சிவஞானம் கிளிநொச்சி மாவட்ட ராணுவ தளபதி முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களுக்காண உதவி பொலிஸ் அத்தியட்சகர் யாழ் மாநகர முதல்வர் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் அரச உத்தியோகத்தர்கள் ராணுவத்தினர் பொலீசார் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு இந்தத் திட்டத்தில் மரங்களை நாட்டி இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்
A9 வீதியின் குறிப்பிட்ட பகுதியினை பசுமை வீதியாக மாற்றும் ஆளுநரின் எண்ணக்கருவுக்கு அமைய இந்த மரநடுகைத் திட்டம் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திரு.பற்றிக் டிரஞ்சன் மேற்பார்வையில் வடமாகாண விவசாய அமைச்சின் உதவியுடன் பிரதேச சபைகளின் பராமரிப்பில் இடம்பெறுவதுடன் இந்த திட்டத்தின் மாவட்ட ரீதியான நிகழ்வுகள் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர்களின் தலைமையில் வவுனியா மற்றும் ஆனையிறவு பிரதேசங்களில் இன்று இடம்பெற்றதாக அறியமுடிகிறது.