த.தே.ம.மு இணங்காவிடில் புதிய கூட்டணி : சுரேஸ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான மாற்றுத் தலைமை, ஓரிரு கட்சியை உள்ளடக்கியதாக இல்லாமல், கொள்கையின் வழியில் நின்று, தமிழ் மக்களுடைய நீண்ட கால கோரிக்கையை வெல்லும் பலமான அணியாக இருக்க வேண்டும் என, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று, யாழ்ப்பாணம் கட்டப்பிராயிலுள்ள அவரது இல்லத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் போது இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த 2 வருடங்களுக்கு மேலாகவே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கான மாற்றுத் தலைமை தேவை என்பது தமிழ் மக்களால் உணரப்பட்டு வந்தது.

கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஆணையை மீறி மக்களின் அடிப்படை விடயங்களை மறந்து செயற்பட்டு வருகின்றது.

இந்தவகையில் மாற்றுத் தலைமை தொடர்பான பல்வேறு பேச்சுவார்த்தைகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைபெற்று வருகின்றது.

வடக்கு முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில், ஒரு புதிய அணியை உருவாக்குவது என்பது தொடர்பில் கூட பல பேச்சுக்கள் நடந்துள்ளது.

தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளையும், அமைப்புக்களையும் அடிப்படையாக கொண்டு பரந்துபட்ட கூட்டணி ஒன்று அமைய வேண்டும்.

அவ்வாறான ஒரு கூட்டணி உருவானால் மட்டுமே உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கக் கூடியதாக இருக்கும் என்றகருத்தும் இருந்து வருகின்றது.

தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் ஈ.ம.பு.வி.மு மற்றும் த.தே.ம.மு உள்ளிட்ட சிவில் அமைப்புக்களை உள்ளடக்கியதாக புதிய அணி உருவாக்கப்பட வேண்டும் என்ற கோணத்தில் பல சுற்றுப் பேச்சுக்களும் நடந்துள்ளது.

புதிய கூட்டணிக்கான ஆதரவினை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தெரிவித்திருந்தது, ஆனால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இப் பேச்சுக்களில் நாட்டம் செலுத்தவில்லை.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி விக்னேஸ்வரனுடைய கட்சியுடன் இணைய முடியுமே தவிர, வேறு யாரும் அதில்
சேர்த்து கொள்ள முடியாது என்ற விடயத்தில் உறுதியான கருத்தினை வெளிப்படுத்தி வருகின்றார்கள்.

இருப்பினும் விக்னேஸ்வரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரை புதிய பரந்த கூட்டில் இணைத்துக் கொள்வதற்கான பேச்சுக்களை நடத்திய போதும் பயனில்லை.

மக்கள் முன்னணியினர் தமது நிலைப்பாட்டில் எந்த மாற்றத்தினையும் அல்லது சமரசத்தினையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் மாற்றுக்கூட்டில் இணைந்து கொள்ளப்போவதில்லை என்ற போக்கில் உள்ளார்கள்.

மாற்றுத்தலைமை ஓரிரு கட்சியை உள்ளடக்கியதாக இல்லாமல், கொள்கையின் வழியில் நின்று தமிழ் மக்களுடைய நீண்ட கால கோரிக்கையை வெல்லும் பலமான அணியாக இருக்க வேண்டும்.

கொள்கை வழியில் தமிழ் மக்களின் நலன்களின் அக்கறை கொண்டு இணையக்கூடிய சகல
தரப்புக்களையும் உள்ளடக்கிதாக இந்த மாற்றுத் தலைமை அல்லது மாற்று அணி இருக்க வேண்டும்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் பல தரப்புக்கள் மிக நீண்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்கள்.
பேச்சுவார்த்தைகளின் பின்னரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இணங்கி வராத நிலையில், புதிய மாற்று அணியில் இணையக் கூடிய அனைவரும் இணைந்து பலமான ஒரு அணியை உருவாக்க வேண்டும்.

மக்கள் நலனை புறந்தள்ளி குறுகிய கட்சி நலன்களை முதன்மைப்படுத்துவது இந்தகால கட்டத்திற்கு பொருத்தமானதாக இருக்காது.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனித்து நின்று அரசியல் செய்வதற்கு எந்த காலத்திலும்
விரும்பியது கிடையாது.

தமிழீழ விடுதலைப்புலிகள் முரண்பாடுகளை கருத்தில் கொள்ளாது ஒரு கூட்டு அணியின் தேவையை
புரிந்துகொண்டு, அனைத்து கட்சிகளையும் அழைத்துப் பேசி தமிழ் தேசியக் கூட்டமைப்பினை உருவாக்கினார்கள்.

இதேபோன்றுதான் தந்தை செல்வா மற்றும் ஜீ.ஜீ.பொன்னம்பலம் போன்றவர்களும், முரண்பாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு கூட்டமைப்பை உருவாக்குவதில் முன்னின்று செயற்பட்டார்கள்.

ஆனால் இன்றிருக்க கூடிய ஒரு இளையவர்கள் என்று செல்லக்கூடிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்தவர்கள் இந்த பாடங்களை புரிந்து கொள்ள வேண்டும்.

கட்சி நலனை முன்னிறுத்தி பேசுவதோ அல்லது செயற்படுவதோ ஆரோக்கியமானதாக இருக்காது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் கருத்துக்கள் பேச்சுக்கள் சபைக்கு எடுத்துக்கொள்ளப்படுபவை அல்ல.

தான் விரும்பும் விடயங்களை அவ்வப்போது அவர் சொல்லிவிட்டுச் சென்றாலும் இறுதி முடிவுகளை கூட்டமைப்பின் சம்மந்தர், சுமந்திரன், மாவை சேனாதிராசா போன்றவர்களே எடுப்பார்கள், இவ்வாறு இவர்கள் எடுக்கப்படும் முடிவுகள் சிறிதரனுக்கு விரும்பியதாக இருந்ததில்லை.

சிறிதரன் எதனையும் பேசுவதற்கு முன்பாக அவர்களின் முடிவுகளைக் கேட்டுப் பேசுவதே பொருத்தமானதாக இருக்கும்சிறிதரன், தான் பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் கருத்துக்களை வெளியிடலாம், ஆனால் அவர் அங்கம் வகிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களால் அவருடைய கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்படுமா என்பதுதான் கேள்வியாக உள்ளது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!