சாகாமக்குளம் வற்றியதால் 2500 ஏக்கர் வயல் நிலங்கள் நீரின்றி அழிவு

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சி காரணமாக குளங்கள் யாவும் வற்றியுள்ள நிலையில் அதிகமான விவசாய நிலங்கள் விவசாயிகளினால் கைவிடப்பட்டுள்ளன.

குறிப்பாக விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவையினை அதிகமாக பூர்த்தி செய்து வந்த சாகாமக்குளம் வற்றி வரண்டு போன நிலையில் காணப்படுகின்றன.

இக்குளத்தின் அடிநிலம் கூட வரட்சியினால் வெடிப்புற்று பாளங்களாக பிளந்து கிடப்பது வரட்சியின் உச்சத்தை வெளிக்காட்டுகின்றது.

இதனால் கால்நடைகளும் குடிநீரின்றி பாதிக்கப்பட்டு மரணிக்கும் நிலையில் அலைந்து திரிவதையும் இங்கு காண முடிகின்றது.

சாதாரணமாக 17.10 அடிவரை நீர்மட்டத்தினை உள்ளடக்கக்கூடிய இக்குளத்தில் தற்போது சொட்டு நீரும் இல்லாமல் வற்றிப்போயுள்ளது.

இதனால் குளத்தை அண்டியுள்ள பலபிரதேசங்கள் குடிநீர் உள்ளிட்ட அதிகளவான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.

இதன் காரணமாக ஊரக்கை, மொட்டையாகல், சேனைக்கண்டம், பட்டிமேடு நீத்தையாறு வடகண்டம் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய சுமார் 2500 ஏக்கர் வயல் நிலங்கள் நீரின்றி கதிர்பறிந்த நிலையில் கைவிடப்பட்டுள்ளதுடன் விவசாயிகளும் செய்வதறியாது திகைத்து போயுள்ளதையும் இங்கு அவதானிக்க முடிந்தது.

ஆனாலும் விவசாய ஆரம்ப கூட்டம் நடைபெற்றபோது குளத்தின் கொள்ளளவு 17.3 அடிவரை காணப்பட்டதாகவும் இந்நிலையில் 3100 ஏக்கர் விவசாய செய்கைக்கு அனுமதி வழங்கப்பட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனாலும் இன்றைய நிலையில் சொட்டு நீரும் இன்றி 2500 ஏக்கர் வயல் நிலங்களை தாம் கைவிட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்தனர்.

வங்கிக்கடன் மற்றும் ஏனைய வழிகளில் பெற்ற கடனின் மூலம் மேற்கொண்ட பயிர்ச்செய்கை முற்றாக கைவிடப்பட்ட நிலையில் அரசாங்கம் தமக்கான நஷ்ட ஈட்டினை வழங்கி விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். (சி)

Recommended For You

About the Author: Suhirthakumar

error: Content is protected !!