1932ஆம் ஆண்டு வர்த்தமானியில் குருந்தூர் மலைப் பகுதியில் ‘குருந்தசேவ’ விகாரை இருந்தது என்று இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க கூறியிருப்பது தவறான விடயமாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குருந்தூர்மலை தொடர்பாக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கில், அங்குள்ள மக்கள் வழிபாடுகளை மேற்கொள்ளலாம் எனவும் எந்தவொரு தரப்பும் புதிய கட்டுமானங்களை மேற்கொள்ளக் கூடாதெனவும் கட்டளையிடப்பட்டிருந்தது.
ஆனால் சூலம் பிடுங்கி எறியப்பட்டது.
அவர்களின் வழிபாட்டுரிமைக்கு குந்தகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புதிய கட்டுமானத்தை அமைக்க அடிக்கல்லும் நடப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் தலைமையில் தொல்பொருள் திணைக்களம் நீதிமன்றக் கட்டளையை மீறியுள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக ரஞ்சன் ராமநாயக்காவுக்கு நான்கு வருடக் கடூழியச் சிறைத் தண்டனை விதித்த சட்டம் இந்த விடயத்தில் நீதிமன்ற அவமதிப்புக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதுதான் இப்போதும் மக்களிடம் எழும் கேள்வியாகும்.
1980ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் தண்ணிமுறிப்பு, குமுழமுனை ஆகிய பிரதேசங்களில் மணற்கிண்டி, பதவியா பகுதிகளிலுள்ள சிங்களக் கூலியாள்கள் வந்து வாடி போட்டுத் தங்கியிருந்து அறுவடை வேலைகளைச் செய்வதுண்டு.
அவர்கள் தாங்கள் தங்கியிருக்கும் காலப்பகுதியில் வழிபடுவதற்கு மலையடிவாரத்திலிருந்த ஒரு அரசமரத்தின் கீழ் புத்தர் சிலையை வைத்தனர். போராட்டம் ஆரம்பமான பின்பு சிங்களவர்கள் அங்கு வருவதுமில்லை.
புத்தர் சிலையும் அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டு விட்டது.
ஆனால் அந்தப் பிரதேசத் தமிழ் மக்கள் கால்நடைகளின் காவற்தெய்வம் எனக் கருதப்படும் ஐயனாரை அவ்விடத்தில் வைத்து பரம்பரையாக வழிபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே வெடுக்குநாறி லிங்கேசுவரர் ஆலயம், செம்மலை நீராவியடிப்பிட்டி பிள்ளையார் கோயில் என்று மேற்கொள்ளப்படும் இந்து வழிபாட்டிடங்களை பௌத்தமயப்படும் ஆக்கிரமிப்பின் அடுத்த நடவடிக்கையாகவே குருந்தூர்மலைச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது ஒரு பகுதி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றளவில் அடக்கிவிட முடியாது.
இது தமிழ் மக்களின் பாரம்பரிய வழிபாட்டுரிமைக்கும் மத சுதந்திரத்துக்கும் விடுக்கப்பட்ட சவாலாகும்.
இந்த அநீதியைத் தடுத்து நிறுத்த கட்சி, மத பேதங்களைக் கடந்து அனைத்துத் தமிழ் பேசும் மக்களையும் ஓரணியில் திரளுமாறு அழைக்கின்றோம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.