இந்திய மீனவர்கள் இருவரது சடலங்கள் மீட்பு!!

இலங்கை கடற்பரப்பிற்குள், அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவப் படகு, யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் உயிரிழந்த, மீனவர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு, கடற்படையினரால், இந்த தகவல் இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை கடற்பரப்பில், இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

நேற்று நெடுந்தீவு கடலில் மூழ்கிய மீனவப் படகில் இருந்த மீனவர்களுடைய சடலமே அவை என, கடற்படையினரால் நம்பப்படுகிறது.

கடந்த 18 ஆம் திகதி பின்னிரவில், நெடுந்தீவில் இருந்து சுமார் 8 கடல் மைல் தொலைவில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் இருந்து இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி, மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், சுமார் 50 ற்கும் அதிகமான படகுகள் வருகை தந்தன.

இவ்வாறு இலங்கை கடற்பரப்பிற்குள், சட்டவிரோதமான முறையில் வருகை தந்த படகுகளையும், மீனவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் போது, இலங்கை கடற்படையிடம் இருந்து தப்பிக்கும் நோக்குடன், இந்திய மீனவர்கள், தமது படகுகளை செலுத்த முயற்சித்தனர்.

இலங்கை கடற்பரப்பிற்குள் வருகைத் தரும் இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையிடம் இருந்து தப்பிச் செல்வதற்காக, இலங்கை கடற்படையின் படகுகளை மோதி சேதப்படுத்துவது வழக்கமானது.

இவ்வாறே, கடந்த 18 ஆம் திகதியும், கடற்படை படகுகளை சேதப்படுத்தி தப்பிச் செல்ல முயற்சித்த வேளையில், இந்திய மீனவர் படகு ஒன்று, கடலில் கவிழ்ந்தது.

கடற்படையின் சுழியோடிகள் குழு, கடற்படை படகுகள் மற்றும் கப்பல்கள் இணைந்து, படகில் பயணித்த மீனவர்களை தேடும் நடவடிக்கைகளை முன்னெடுத்தன.

இந்த சம்பவத்தில், கடற்படையின் படகிற்கு சேதம் ஏற்பட்டது.

படகு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது என, இலங்கை கடற்படை தெரிவித்தது.

இந்த நிலையில், இந்திய மீனவர்கள் இருவரது சடலங்கள், காங்கேசன்துறை கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!