உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களை நடத்திய சஹ்ரான் தலைமையிலான குழுவைச் சேர்ந்த அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ள போதிலும், ஐரோப்பிய நாடுகளில் இடம்பெறுவது போல் தனி நபர்களால் முன்னெடுக்கப்படும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறலாம் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் நேற்று கரையோர பாதுகாப்பு படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிய பிராந்திய கரையோர பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரிகளின் 15 வது செயற்குழு கூட்டமொன்று நடைபெற்றது.
சீனா, இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் கரையோரப் பாதுகாப்பு படைகளின் பிரதானிகள் கலந்துகொண்ட மாநாட்டில், பிரதம அதிதியாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன கலந்துகொண்டு உரையாற்றினார்.
இதன்போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், சஹ்ரானின் குழு முழுமையாக தோற்கடிக்கப்பட்டுள்ளது.
எஞ்சியிருந்த அனைத்து உறுப்பினர்களையும் கைதுசெய்துள்ளோம்.
அவர்களால் இனிமேல் குழுவாக இணைந்து எதனையும் செய்ய முடியாது.
எனினும் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளைப் போன்ற ஒரு அமைப்பல்ல.
மதத்தை அடிப்படையாகக் கொண்ட பயங்கரவாதிகள் இவர்கள்.
அதனால் தனி நபர்களால் தாக்குதல்களை நடத்தக்கூடிய நிலையொன்று காணப்படுகின்றது.
ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறான தனி நபர்களால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை நாம் கண்டோம். அதனால் அவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறக்கூடிய ஆபத்துக்கள் காணப்படுகின்றன.
அவ்வாறான தாக்குதல் அச்சுறுத்தல்களை முழுமையாக தடுத்து பாதுகாப்பை உறுதிப்படுத்திவிட்டோம் என்று எம்மால் வாக்குறுதி அளிக்க முடியாது.
இதேவேளை சமூக வலைத்தளங்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறப்போவதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாக குற்றம்சாட்டிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜேவர்தன, வதந்திகளுக்கு மக்கள் ஏமாறிவிடக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். (நி)