மட்டக்களப்பு மாவட்டம், ஆயித்தியமலை பிரதேசத்தில், நிலவும் நீண்ட வறட்சி காரணமாக மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில் அப்பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் பொதுக்கிணறுகள் அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டதுடன் இலண்டன் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினால் பல்வேறு உதவிகளும் வழங்கிவைக்கப்பட்டன.
ஆயித்தியமலை மணிபுரத்தில் நடைபெற்ற நிகழ்வின் ஆரம்பத்தில் களுவாஞ்சிகுடி மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் ஏற்பாட்டில் விசேட பூஜை வழிபாடுகள் நடாத்தப்பட்டதுடன் மழை வேண்டியும் விசேட பிரார்த்தனையும் செய்யப்பட்டது.
இதன் போது இலண்டன் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் உதவியில் அமைக்கப்பட்ட மூன்று குடி நீர் கிணறுகள் மக்கள் பாவனைக்காக இன்று கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ். சுதாகர், கரடியனாறு மகாவித்தியாலய அதிபர் ஆர்.செந்தில்நாதன், மணிபுரம் விக்னேஸ்வரா வித்தியாலய அதிபர் ரி.கரிகாலன் போன்றோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிள்ள ஆயித்தியமலை, மணிபுரம் போன்ற கிராமங்களில், மக்களின் குடிநீர் பிரச்சனையினை தீர்க்கும் வகையில், இந்த கிணறுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று, தூரப் பிரதேசங்களிலிருந்து பாடலைக்கும் ஏனைய தனியார் வகுப்புக்களுக்குச் செல்லும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர் பத்து மாணவர்களுக்க துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைத்ததுடன், பாடசாலை செல்லும் மற்றும் முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டதுடன் இக்கிராமத்திலுள்ள வயோதிப அன்னையர்களுக்கு ஆடைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எட்டு கிராம சேவையாளர் பிரிவுகளில் 89 கிராம சேவையாளர் பிரிவுகள் வறட்சியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தெரிவித்தார். (சி)