முல்லைத்தீவு மாவட்டத்தின், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, முத்துவிநாயகபுரம் முதலாம் கண்டம் பகுதியில், சமையல் எரிவாயு கொள்கலனில் ஏற்பட்ட கசிவு காரணமாக, வீடு தீக்கிரையாகியுள்ளது.
தனுஜன் என்பவரது வீட்டில், இன்று காலை 11.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது, வீட்டில் இருந்து எந்தவித உடமைகளும் மீட்கப்பட முடியாத அளவுக்கு, எரிந்து சாம்பலாகியுள்ளன.
சமையல் எரிவாயு கொள்கலனில் ஏற்பட்ட கசிவு காரணமாக, வீடு தீப்பற்றி எரிவதை அவதானித்தவர்கள், அயலவர்களின் உதவியை நாடி, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்பட்ட போதும், உடமைகள் எவற்றையும் காப்பாற்ற முடியாத அளவுக்கு தீ பரவியுள்ளது. இதனால், அனைத்து உடமைகளும் எரிந்து சாம்பலாகியுள்ளன.
இருப்பினும், வீட்டில் இருந்தவர்கள் உயிர்ச் சேதங்கள், காயங்கள் எதுவும் இன்றி பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர்.
இந்த அனர்த்தில், இலத்திரனியல் பொருட்கள், காணி ஆவணங்கள் உள்ளிட்ட பல ஆவணங்கள் மற்றும் பணம், நகை என்பன எரிந்து நாசமாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (சி)