ரணில் அமெரிக்காவுக்காக செயற்படுகிறார் : தயாசிறி

காணி கொள்வனவு மற்றும் காணி தொடர்பான ஒழுக்கவிதிகள் சட்டத்தின் மூலம், நாட்டில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இன்று, கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் தமது காணிகளை சொந்தமாக்கிக் கொள்வதற்காக காணி கொள்வனவு மற்றும் காணி தொடர்பான ஒழுக்கவிதிகள் சட்டத்தின் மூலம், நாட்டில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அமெரிக்காவின் வசதிக்கேற்பவே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த சட்டங்களை கொண்டு வர முயற்சிக்கிறார்.

காணி தொடர்பான இந்த சட்டங்கள் மூலம், திருகோணமலை முதல் கொழும்பு வரையான பொருளதார வலய திட்டத்திற்கு, மில்லேனியம் சவால் ஒப்பந்தத்தின் மூலம், அமெரிக்காவுக்கு இடங்களை தாரைவார்ப்பதே பிரதமரின் நோக்கமாகும்.

இதற்காக அமெரிக்காவிடமிருந்து 480 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெற்றுக் கொள்ளப்பட இருப்பதாக தெரிய வருகின்றது. ஆனால் இந்த நிதி எதற்காக, ஏன் பெறப்படுகின்றது என்ற ஒரு திட்டமிடலும் இல்லை.

இவ்வாறு உள்நாட்டு இடங்களை, அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு தாரைவார்த்துக் கொடுக்க வேண்டாம் என்று, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுகின்றோம்.

அவ்வாறில்லை என்றால் மக்கள் இதற்கு எதிராக வீதிக்கு இறங்க வேண்டிய நிலைமையே ஏற்படும்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுவிலுள்ள ‘சிறு பிள்ளைகள்’ சிலர் தமக்கு அமைச்சுப் பதவிகள் கிடைக்காமல் போய்விடும் என்ற பயத்தில்தான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடனான கூட்டணியை எதிர்க்கிறார்கள்.

கூட்டணி அமைப்பது தொடர்பில் இது வரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில், 25 யோசனைகளுக்கு இரு தரப்பிலும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளில் தலைமைத்துவம் உள்ளிட்ட ஏனைய முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்படும்.
சுதந்திர கட்சியின் பிரதி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில், எதிர்வரும் நாட்களில் உள்ளக பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

ஆனால் இரு தரப்பிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைக்கான தினம் குறித்து தீர்மானிக்கப்படவில்லை. எவ்வாறிருப்பினும் கூட்டணி நிச்சயம் சாத்தியமாகும்.

பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்து தீர்வுகள் எட்டப்பட்டதன் பின்னர், பதவிகள், அதிகாரங்களை பகிர்தல் குறித்து கவனம் செலுத்தப்படும்.
என குறிப்பிட்டார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!