அவுஸ்ரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி அபார வெற்றியீட்டியுள்ளது.
அவுஸ்ரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் சென்றுள்ள, இந்திய அணி 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றது.
முதலாவது டெஸ்ட் போட்டி, அடிலெய்டில் இடம்பெற்ற நிலையில், இந்திய அணி 8 இலக்குகளால் படுதோல்வியடைந்திருந்தது.
அவுஸ்ரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, மெல்பேர்னில் கடந்த 26ஆம் திகதி ஆரம்பமாகியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி, 195 ஓட்டங்களுக்கு அனைத்து இலக்குகளையும் இழந்தது. தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணித்தலைவர் ரஹானேயின் சதத்தின் உதவியுடன் 326 ஓட்டங்களைப் பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்ரேலியா அணி 200 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், அனைத்து இலக்குகளையும் இழந்தது.
இதனடிப்படையில் இந்தியா அணிக்கு 70 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
வெற்றி இலக்கு நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 16 ஆவது பந்துப் பரிமாற்றத்தில் 5 பந்துகள் வீசப்பட்ட நிலையில், 2 இலக்குகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
இரு அணிகளும் இதுவரை இடம்பெற்ற இரு போட்டிகளில், தலா ஒவ்வொரு போட்டிகள் வீதம் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.