மக்களை பயம் காட்ட அமெரிக்காவை பயன்படுத்துகிறார்கள் : துஸார இந்துனில்

மக்களின் காணிகளை அபகரித்துக் கொள்ள, அமெரிக்கா முயற்சித்து வருவதாக ஒரு சிலரால் வெளியிடப்படுகின்ற கருத்துக்களில் எந்தவித உண்மையும் இல்லை என, ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் துஸார இந்துனில் தெரிவித்துள்ளார்.

இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

‘நாட்டில் காணி உரிமம் இல்லாதவர்களுக்கு காணிப் பத்திரங்களை வழங்கிக் கொண்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு, கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
தற்போது அந்த விமர்சனங்களுக்குள் அமெரிக்காவையும் சேர்த்து விடுகின்றனர்.
உதா கம்மானவில் உள்ள சில பரப்புக்களைக் கொண்ட காணிகளை பெற்றுக் கொள்வதற்காக, அமெரிக்கா இன்று முயற்சிப்பதாகவும், அந்த கிராமத் திட்டத்திலுள்ள புஞ்சி பண்டா, கிரியம்மாவின் தீப்பெட்டியைப் போல இருக்கும் வீடுகளை அபகரிப்பதற்காக அமெரிக்கா திட்டமிடுவதாக, சிலர் கூறுகின்றனர்.
பதவிய, சிறிபுர பகுதிகளில் இரண்டு ஏக்கர் நிலத்தில் பயிர்ச் செய்கையை செய்கின்ற விவசாயிகளின் காணிகளை கபளீகரம் செய்ய, ஜோன், கெனடி, டொனால்ட் ஆகியோர் விரைகின்றனராம்.
இவ்வளவு கீழ்த்தரமான பேச்சுக்களை பேசுகின்றனர்.
தற்போது 10 இலட்சம் காணி உரிமப் பத்திரங்களை வழங்கும் திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றோம்.
இதனிடையே தடைகளை செய்ய முன்வருகின்றனர்.
காணி உரிமம் இல்லாதவர்களுக்கு அதனை நிரந்தரமாக இல்லாமல் செய்வதற்காக, அமெரிக்கா என்கிற நாட்டை பயன்படுத்தி பொய்யான அச்சத்தை உருவாக்க முனைகின்றனர்.
ஆனால் இந்த சில ஏக்கர், பரப்பு காணிகளை அபகரிப்பதற்கு அமெரிக்கா வராது என்று நாங்கள் நினைக்கின்றோம்.
குருநாகல் பிரதேசத்திற்கு அண்மையில் விஜயம் செய்த எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, அனைத்து மதங்களையும் நேசிக்கின்ற ஒரு தலைவரை சரியான தருணத்தில் வேட்பாளராக அறிவிப்பேன் என்பதை கூறியிருக்கின்றார்.

அத்தோடு அந்த உரையில், அண்மையில் பிரச்சினைகளின் போது பெயர்கள் கூறப்பட்ட சில நபர்கள்கூட தனது மேடையில் ஒன்றுசேரலாம் என்றும் ஆருடம் வெளியிட்டிருந்தார்.
இருந்த போதிலும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களுக்குப் பின்னர் இடம்பெற்ற முஸ்லிம் மக்கள் மீதான அனைத்து வன்முறைகளுக்குப் பின்னால், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர்களே செயற்பட்டிருக்கின்றனர்.

இப்படியிருக்க, எவ்வாறு மஹிந்த ராஜபக்ச ஒருபுறத்தில் வன்முறையாளர்களையும், இன்னொரு புறத்தில் அனைத்து மதங்களையும் நேசிக்கின்றவர்களையும் வைத்திருக்க முடியும்?
இந்த நாட்டை தீயிட்டு கொளுத்தக்கூடிய நபர்களே அவரது குழுவில் இருக்கின்றனர்.
விகாரைகளுக்குச் சென்று பௌத்த தலைவர்களிடம் ஒன்றைக்கூறிவிட்டு வெளியே வந்து வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக இன்னொன்றை கூறி ஈனச்செயற்பாட்டில் ஈடுபட வேண்டாம்’
என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!