நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சியினால் மக்கள் நீரின்றி பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்டுவரும் இச்சந்தர்ப்பத்தில் குடிநீரினை பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும்.
ஆனாலும் குடிநீரின் அநாவசிய வெளியேற்றத்தை தடுக்க முடியாத சந்தர்ப்பங்களும் அவ்வப்போது நம்மிடையே உருவாகி வருகின்றது.
அவ்வாறான சந்தர்ப்பமொன்று அக்கரைப்பற்று சாகாமம் பிரதான வீதியில் உள்ள புகைப்பட்ட நிலையமொன்றில் இன்று ஏற்பட்டது.
குடிநீர் இணைப்பு தொடர்பில் 24 மணிநேரமும் கண்காணிப்பு செய்யும் பிரிவொன்று செயற்படாமையே இதற்கு காரணம் என பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
புகைப்பட நிலையத்தில் குடிநீர் இணைப்பிற்காக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் பொருத்தப்பட்ட மானியின் குழாயின் அடியில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக நேற்று(08) இரவு 11 மணிமுதல் நீர் வெளியேறியுள்ளது.
இதனை அறிந்து கொண்ட நிலைய உரிமையாளர் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கும் 1939 எனும் அவசர தொலைபேசி இலக்கத்திற்கும் இரவே அறிவித்துள்ளார்.
ஆயினும் இன்று காலை 10 மணிக்கு பின்னராகவே சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் வருகை தந்து நிலைமையினை சீர் செய்தனர்.
இதன் காரணமாக அதிகளவான குடிநீர் அநாவசியமாக வீதியில் வெளியேறியதுடன் குறித்த நிலையத்தினுள்ளும் புகுந்துள்ளது.
ஆகவே குடிநீருக்கான அதிக தேவைப்பாடும் அதேநேரம் பற்றாக்குறையும் நிலவும் இச்சந்தர்ப்பத்தில் வீணாக வெளியேறும் நீரை பாதுகாக்க சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் குறிப்பிட்டனர்.
மேலும் ஏனைய அத்தியாவசிய சேவைகளைப்போன்று 24 மணிநேரமும் இயங்க கூடிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரிவொன்றும் செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.(சி)